ஓய்வு பெறும் படி சச்சினை யாரும் வலியுறுத்தாதீர்கள்: முன்னாள் வீரர்கள் |
[ செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2012, 05:14.39 AM GMT +05:30 ] |
கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சச்சினை யாரும் வலியுறுத்தக் கூடாது என்று முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். |
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று, தற்போது கிரிக்கட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றவுடன், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவித்திருக்கலாம் என்று கபில் தேவ் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சச்சினின் ஓய்வு குறித்து யாரும் வலியுறுத்தக் கூடாது என்றும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டுமெனவும் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே: இன்று வரை சச்சின் தான் இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கிறார். இந்நிலையில் அவரது ஓய்வு பற்றிய முடிவை அவரே எடுக்க வேண்டும்.
அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற மற்றவர்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய கிரிக்கட் அணிக்கு தனது பங்களிப்பை இன்று வரை அவர் சிறப்பாகவே செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் அணித் தலைவர் குண்டப்பா விஸ்வநாத்: தனது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க சச்சினுக்குத் தான் முழு உரிமை உண்டு. இதில் நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.
முன்னாள் அணித் தலைவர் பிஷண் சிங் பேடி: கபில்தேவ் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து, என்னைப் பொருத்தவரையில் சச்சின் இடத்தில் விளையாட இப்போதும் கூட இந்திய அணியில் பொருத்தமான வீரர் இல்லை.
முன்னாள் தொடக்க வீரர் கெய்க்வாட்: ஒரு நாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று கூறுவதற்கு ஏதாவது ஒரு வலுவான காரணம் கூற முடியுமா?
இப்போது வரை அவர் சிறப்பாகத் தான் விளையாடி வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக அணியில் இருக்கிறார் என்ற காரணத்தை கூறி, ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியும் என்று கூறுவது முறையல்ல.
இப்போது உள்ள இளம் வீரர்கள் எவராலும் அவரது இடத்தை நிரப்ப முடியாது. தொடர்ந்து சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் யாரும் நமது அணியில் இல்லை.
இந்திய அணியின் தொடர் தோல்விக்கு அணித் தலைவர், பயிற்சியாளர் அல்லது தனிப்பட்ட ஒரு வீரரை குறை கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். |