ஏன் கதை கேட்க வேண்டும் – ஒரு கருத்தாய்வு?
மனித சமுதாயத்திலேயே மூத்த குடியாம் தமிழ் இனம் பல்வேறு துறைகளில் பாருக்கே முன்னோடியாய் திகழ்ந்ததென்பது நமக்கெல்லாம் பெருமையே! மற்றவர் மனம் கோணாமல் நீதி நெறியை போதிப்பதிலும் கை தேர்ந்தவர்கள் நம் முன்னோர் என்றால் அது மிகையல்ல!
நாட்டு மக்களுக்கு நல்வழி காட்ட, நல்லொழுக்கங்களை புகட்ட, நீதியுரைக்க ஆன்றோர்கள் தேர்ந்தேடுத்தவையே கலைகள்! அப்படிப்பட்ட ஒரு கலையே இலக்கியம். மனித வாழ்வின் நெறிகளை முறைப்படுத்த அவை சொல், எழுத்தாய் வகைப்படுத்தப்பட்டது! சொல்லுக்கும் எழுத்துக்கும் என்ன வித்தியாசம்?
புரிதலுக்காக சொல் என்பதை வாய்மொழியாய் உணர்வோம்! எழுத்தை ஓலைச்சுவடி, கல்வெட்டு,சிற்பம் மற்றும் புத்தகமாய் உணர்வோம்! இவ்வாறு வாய் மொழியாய் செவி வழியாய் பரவி வந்த பல சிறுவர் கதைகள், நீதி நெறிக்கதைகள், மந்திர-தந்திரக்கதைகள் மக்களுக்கு பண்புகளை போதிக்க, மூட நம்பிக்கைகளை போக்க,நம்பிக்கை கொடுக்க பயன்பட்டது!
பலர் அமர்ந்த சபையில் யாரையும் குறிப்பிடாமல் பொதுவாய் நல்ல கருத்துக்களை போதிக்க கதைகள் பல விதங்களில் பயன்பட்டன. அப்படிப்பட்ட கதைகளை தேடும் சிரமமின்றி தொகுத்தளித்த கதாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் அவற்றை இலவசமாக படிக்க நூலகங்கள் அமைத்த அரசாங்கத்திற்கும் அக்கோயில்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது ஆத்மார்த்தமான குருநாதர் SRN என்றழைக்கபடும் திரு. S .ரகுநாதன் ஐயா அவர்களுக்கும் இந்நேரத்தில் என்னன்றியை உரித்தாக்குகிறேன்!
இன்று விஞ்ஞான வளர்ச்சி உலகையே வலைகளில் இணைத்து உள்ளது! ஆனால் இணைந்திருக்கும் அனைத்து புள்ளிகளும் / அன்பர்களும் நம் முன்னோர்கள் போல் கண்ணியம் காப்பதில்லை என்பது வருத்ததிற்குரியது! இப்போது தான் இது – இந்த வலைத்தொடர்புகள், இயக்கங்கள் பரவ ஆரம்பித்திருப்பதால் இத்தளங்களில் சிறிது உரிமை மீறல்கள், நீதி நெறி பிசகல்கள் தவிர்க்க முடியாததே! ஆனால் நாமும் தனியே நமக்குள் ஒவ்வொருவரும் நல்லவரே! நமக்கென்று ஒரு நீதி இருக்கும்! பொது இடங்களில் மட்டும் நாம் நமது விதிகளை எவ்வளவு தூரம் /எந்த அளவு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை நாமே உணர்ந்து கொள்ளும் போது, இம்மீறல்கள், பிசகல்கள் இல்லாமல் போகும்!
எனவே, நமது முன்னோர் வழியே, நானும், நான் கற்றறிந்த கதைகளை பதிவேற்றம் செய்து தாங்களும் அப்பயனை அனுபவிக்க அழைக்கிறேன்! இந்தக் கதைகள் யாவும் நாம் என்றோ / எங்கோ கேட்டோ படித்தோ இருப்போம்! இக்கதைகள், என் சிற்றறிவிற்கு ஏற்ப, எனது மூளையில் பதிந்த வழிப்படி புனைய இருக்கிறேன்! கதையை ‘நான் புனைந்தேன்!’, என்பதை விட, ‘கதை நன்கு பதிக்கப்பட்டது!’, என்பதிலேயே எனக்கு பெருமகிழ்ச்சி! நான் எப்போதும் சொல்பது போல் இக்கதைகளுக்கு நீங்கள் எதிர்பாராத ஒரு மறுப்பு பதியப்பட உள்ளது. அதையும் பொறுத்தருள்க!
விரைவில் எதிர்பாருங்கள்! உங்கள் இனியவன் கதைகளை!