Story Highlights
- எங்கே எனது நேர்மை!
- வளர்ச்சியில் புதைத்த கடமை!
ஏழரையாம் அறிவு – 7 1/2th Sense | இயல்பில் இல்லாதது; இயல்பாய் மாறியது (Unusual but made Common)
நாட்டில் நடக்கும் செயல்களில், செயல்களின் உண்மைத்தன்மைப் பற்றி யோசிக்கும் போது எழுந்த குமுறல்கள் இதோ தமிழ்ச்சொற்குவியலாய்!
கவிதை என்றியம்ப மனமில்லையதனால் இவைக் சொற்குவியலே!
இலக்கணம் மட்டுமன்றி எம் பொதுக்குணமுமின்றி எழுதப் போவதால் இவை சொற்குவியலே!
- முற்பகல் செய்யின்
காலம் எப்பேர்பெற்ற
ஞாலத்தலைவரையும் தன் மாயா
ஜாலத்தால் மாற்றிவிடும்.
குழந்தையொன்று புதிதாய்
கடை கண்டால், ஆடல்
பொருள் கண்டால்
மழலையோடு மகிழ்வது போல்..
ஒரு புது பெண் – புதுமைப்பெண்
அதிலும் அரசியலுக்கு மட்டுமல்ல
குடும்பவியலுக்குமொவ்வாத
பிடிவாதம் கொண்ட பெண்..
தான் வழிநடத்தும் இயக்கத்தின்
நிகரில்லா தலையாய்
தாய்தமிழ் நாட்டின் முதலாய்
வான் தொட்டபோது மகிழ்ந்த செய்கை..
ஏழைத் தொழிலாளிகள்
இயல்பாய் இயற்ற முடியாமல் போன
இருமனமிணையும் திருமண விழாவை
பாரே ஸ்தம்பிக்கும்படி செய்தது..
வீடே கனவாய்ப் போன
அப்பாவி குடிமுன்
நாடே அதிசயிக்கும்
வனம், தோட்டம் கண்டது..
இப்படியாய் சிலபல
சிறுபிள்ளைத்தனம்
அவற்றின் விளைவறியா
மந்த – அதிகார போதை
முற்பகல் செய்யின்
பதினெண் வருடங்கழித்து
பிற்பகல் விளைந்தது!
- கொள்ளைக் குடும்பம்
வண்டி வாகனமில்லை
வழிப்போக்கின் வசதியுமில்லை
வந்ததெல்லாம் திருட்டு ரயிலேறி
சென்னை மாநகர் தேடி!
கட்சிப்பணியாற்றி
காணாமல்போன கனவான்கள்
தேர்தல் போரினிலே
தொழிலிழந்த தோழர்கள்..
தம் மனம், கொள்கை
தாம் மதித்து நடந்தபோது
அன்னைத்தமிழ் பிடித்து, அரியணையை
எண்ணத்தில் வைத்த ஒருவர்
தொண்ணூறில் தொற்றிக்கொன்டாலும்
தொன்மை தமிழ்ப் பற்றில்லை
அதனால் அவரின் எழுபத்தைந்துகளில்
அடைந்ததிருள் தமிழகமே!
தன் குடி தம் மக்களென்றுமட்டும்
தலையொன்றிருந்தால்
தமிழகத்தின் நிலையே
வந்து சேருமென்று புது விதி செய்தார்
இப்போது ஆசியாவின்
சக்திவாய்ந்த குடும்பம்
அக்கொள்ளை குடும்பம்
இனிமேல் தான் மெய்ப்பொருள் பகுதியை அடைகிறோம். நாட்டில் விவசாயம் செய்யத் தேவையான மழையில்லை. தொழில் செய்யச் சாதகமான நிலையில்லை. இருந்தாலும் செய்யக்கூடாததை செய்தால் மட்டுமே தொழில் இலாபம் சாத்தியமாகும். நாடு எப்படிப் போனாலும் யாருக்கும் கவலையில்லை. ஏனென்றால் யாருக்கும் மனநிறைவில்லை. அடிப்படையில் பார்த்தால் சாதாரண குடிமகனுக்கு, நிரந்தர வருமானம் பற்றிய கவலை. நிரந்தர வருமானமிருந்தால் நிலபுலன்கள் பற்றிய கவலை. நிலபுலன்கள் இருந்தால் மரியாதை-கௌரவம் பற்றிய கவலை. மரியாதை இருந்தால் செல்வாக்கு பற்றிய கவலை. செல்வாக்கு இருந்தால் பதவி பற்றிய கவலை. பதவி இருந்தால் அதிகாரம் பற்றிய கவலை. அதிகாரம் இருந்தால் அதைத் தக்க வைக்க கவலை. இது நீள் வட்டமாய் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இவ்வட்டத்தின் மறுபாதி, எதுவுமே இல்லையென்றால் உண்ண உணவாவது வேண்டுமென்ற கவலை! அதன் பிறகு, உறங்க இடமாவது வேண்டுமென்ற கவலை! அதன் பிறகு அது தொடர்ந்து கிடைக்கவேண்டி கவலை.
- இயற்கை
இறைவன் படைப்பில் அனைத்தும் பொதுவாய் இருக்க இவ்வேற்றமிறக்கம் எப்படி சாத்தியமாயிற்று? மனிதன் வகுத்த நல்வாழ்வொழுக்க விதிகளை சில பதர்கள் மீறியதாலும், ஒவ்வோர் மனிதனின் இயல்,அறிவு,கற்றல் திறன் மாறியதாலும் இவ்வித்தியாசங்கள் சாத்தியமாயிற்று. அதில் உயர்ந்து ஓங்கி வாழ்ந்த இனம் மற்றும் தோன்றல்கள் அவர் சார்ந்தவர்க்கு தலையாய் அரசாய் உயர்ந்து பிறகு பல சரித்திரப்புகழ் போர்கள், மாற்றங்களால் தற்போதைய மக்களாட்சி முறைக்கு வந்துள்ளோம்.
- பொதுச்சொத்து குல நாசம்
பாரதத் திருநாடு விடுதலை அடைந்த பிறகு (அடையும் முன்பே சில பல அதிகார, கௌரவ, சாதி, சமய பிரிவுகளால் தாமதமானது வேறு கதை) நம்மை நாமே ஆள ஏற்படுத்திய சட்ட திட்டங்கள் படி ஒவ்வொரு பகுதியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களின் குறை நலன்கள் குறித்து நாட்டின் ஆளும் மன்றத்தில் எடுத்துரைத்து பொது நிதியிலிருந்து திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவதென்பது அடிப்படை கடமை. ஆரம்ப கால கட்டங்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பலரும் தம்பொறுப்புணர்ந்து ஒழுக்க நெறி தவறாது வாழ்ந்து புகழோடு விடை பெற்றனர். ஆனால் தற்காலத்தில் வாழ்ந்துவரும் மிக மூத்த தலைகள் பலர் தம் ஆரம்ப காலத்திலிருந்தே ஒழுங்கீனமாய் வாழ்ந்தே பழகியதன் பலனை நாம் இன்று அனுபவிக்கிறோம்.
- எந்த மட்டை நல்ல மட்டை
இன்று ஒரு தலைவர் மேல் முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்று குற்றமற்றவர் என்று விடுதலையடைந்துள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் குறை கண்டுள்ளனர் அறிஞர்கள். அக்குறை களைந்தால் மீண்டும் விடுதலை பெற்ற தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பும் மாற வாய்ப்பும் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க இத்தீர்ப்பு குறித்து பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் கருத்துக்கள்தான் நகைப்புக்குரியது. இலட்சம் கோடி ஊழல் செய்த கேடிகள் எல்லாம் நீதி நெறி, மன சாட்சி பற்றி கோடிட்டுக் காண்பிப்பது நகைப்பிற்கெல்லாம் உச்சம்.
ஒரு கட்சியின் கொள்கைகளைப் பரப்புபவர் கொள்கை பரப்பு செயலாளர் என்பதை கொள்ளை பரப்பு செயலாளர் என்று புரிந்து கொண்டனரோ? அல்லது கட்சியின் சமீபத்திய கொள்கை அதுவோ? என்னும்படி பாரத நாட்டிற்கே ஊழல் வகுப்பெடுத்தவர்கள் பேசுவதைக் காண்கையிலே சாத்தான் வேதம் ஓதுவது போல் தோன்றுகிறது.
மேலும் இப்படி சொல்வதால் தற்போது விடுதலை அடைந்த தலைவர் நல்லவர், உத்தமர், நேர்மையானவர் என்று நான் வாதிடுவதாக எண்ண வேண்டாம். அவரும் குற்றம் செய்தவர் தான் என்று கூறி இந்திய அரசியலமைப்பின் தூணான நீதித்துறையைப் பழிக்கவும் மாட்டேன். ஒரு சாதாரண இந்தியனாய் அதிலும் தமிழனாய் நான் எம்மனதில் எண்ணுவது இது தான். சாக்கடையில் ஊறிய மட்டையில் எந்த மட்டை நல்ல மட்டை? ஆகவே யார் உள்ளே போனாலும் வெளியே வந்தாலும் நான் உழைத்தால் தான் எனக்கு உணவு. (இந்த கடைசி வாக்கியம் மட்டும் நேர்மையான, மான, ரோசமுள்ள சாமானிய மக்களுக்கு மட்டுமே பொருந்தும்)
- ஏன் நல்ல மட்டை இல்லை?
காரணம் மிகவும் எளிமையானது; சுலபமானது. இங்கே மக்களுக்கு அடிப்படை ஒழுக்கம் இல்லை. நீதி, நெறி, பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படும் பல ஒழுக்கம் சம்மந்தப்பட்ட கருத்துக்களுக்கு, முறைகளுக்கு குழந்தைகள் பார்த்துக் கற்றுக்கொள்ள நிகழ்கால எடுத்துக்காட்டாக யாருமே, ஏன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. (தயவுசெய்து எங்க அப்பா, அம்மா, ஆசிரியர் நல்லவர் என்று யாரும் கத்தியைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்! நான் சொல்வது அனைத்தும் அதிகபட்சமாக 90 சதவீதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்!) ஒரு குழந்தை பிறந்தது முதல் வளர்ந்து பெரிதாகி வாழ்ந்து இறப்பது வரை எல்லா இடங்களிலும் அன்பளிப்பு என்ற வகையிலாவது ஒழுங்கீனம் இருக்கிறது. இவ்வாறு வாழும் ஒரு கூட்டத்திலிருந்து எப்படி ஒரு நல்லவன் வரமுடியும்? வந்தவர் திருந்தினால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட சாத்தியக்கூறாகத் தான் இப்போதைய அவ்விடுதலை பெற்ற தலைவரை எதிர்பார்க்கிறோம். (தீர்ப்பை இணையத்தில் விடாமலிருந்திருக்கலாம் என்றும் / அல்லது வேண்டுமென்றே தீர்ப்பு தவறோடே பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் / இணையத்தில் பதிவு செய்தது தவறுதலாக தவறான விபரத்தை பதிவு செய்திருக்கக்கூடும் என்றும் எம்மனதில் எழும் எண்ணங்களையும் மறைக்க விரும்பவில்லை!)
அதற்கும் காரணமில்லாமலில்லை. ஆம் ஐம்பூதங்களிலிலும் ஊழல் செய்த கொள்ளை குடும்பம் எங்கே கூட்டுச்சதி செய்து வந்துவிட்டால் பிறகு தமிழகத்தையே சுரண்டி அழித்து விடுவர். ஏனென்றால் நாமும் யோக்கியர்கள் இல்லையே. இலவசத்துக்கு அலையும் இளிச்சவாயர்கள் தானே! சுயமரியாதையை விற்று ஓட்டுக்கு பணம் வாங்கும் ஈனர்கள் தானே! நாடு எப்படி போனால் என்ன! என்று நம்மை, நம் வளத்தை மட்டுமே பார்க்கும், போற்றும் சோம்பேறியான தேச துரோகிகள் தானே!
இல்லையென்றால், நமது நாட்டின் பிரதமர் சரிந்து வரும் இந்தியப் பொருளாதரத்தை மீட்கும் நடவடிக்கை என்று வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய வைக்க முனைவதை எதிர்த்திருப்போம் அல்லவா! இது எம் தேசம்! நாமே முதலாளி! உங்களுக்கு தேவையென்றால் எங்களிடம் வாங்கிப் பயன்படுத்துங்கள் என்று சொல்லியிருக்க வேண்டாமா? மேலும், ஆட்சிக்கெதிராக சிலர் பேசிவருவதையும் அவர்கள் எதிர்ப்பது எதுவோ அது அவர்களாலேயே முன்னர் கொண்டு வரப்பட்டது என்றறியாமலே அவற்றைச் சிலாகித்து வந்திருப்போமா? ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடம் முடிந்தது. அவர் கிட்டத்தட்ட 15 நாடுகளுக்கு மேல் பயணம் சென்று விட்டார். சீனா சென்றிருக்கும் அவர் அங்குள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர நீண்டகாலமாக உள்ள பிரச்சினைகளான எல்லைப் பிரச்சினை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் பங்களிப்பு, நமது சொந்த மாநிலங்களின் மீது அவர்கள் கொண்டாடும் எல்லை மீறல் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வுக்கு என்ன செய்வார்? என்ன செய்யமுடியும்? என்றுகூட தெரியாத முட்டாள்கள்தானே நாம்! கடைசியாக இலங்கைக்கு செல்லும்முன் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று அந்நாட்டின் மூத்த பிரதிநிதி கூறியதைக் குறைந்தபட்சம் கண்டிக்கவாவது நம் தலைவருக்கு தைரியம் இருந்ததா?
இதோ இப்பதிவின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம்! இவையெல்லாம் நியாயமாகப் பார்த்தால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்திருக்க வேண்டிய சிந்தனை. ஆனால் நண்பர்களே!, இது எனக்கு மட்டும் எழுந்துள்ளது என்று கூற விரும்பவில்லை. நாம், நமது கடமையென்ன? தினமும் காலையில் எழுந்து குளித்து உணவுண்டு, படிப்பவர்கள் படித்துத் திரும்பி விளையாடி உணவுண்டு உறங்கி எழுந்து மீண்டும் அதே வேலைகளை செய்து வளர்ந்து வேலைக்கு சென்று சம்பாதித்து கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று நம் பேர் சொல்லும்படி வளர்த்தி ஒரு அம்பது அறுபது வயசுல எடத்தைக் காலி பண்ணிட்டு போனால் நம் குழந்தைகளும் அதே வழி தொடர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பிப்பது போன்ற முக்கியமான பெரும் பணியிருக்கும்போது நாடாவது மக்களாவது!
ஏழரையாம் அறிவு – 7 1/2th Sense | இயல்பில் இல்லாதது; இயல்பாய் மாறியது (Unusual but made Common)
- இன்னைக்கு என்னப்பா விசேசம்? அந்தத் தலைவர் ஜெயிச்சுட்டார்! ஓ! அப்படியா? சரி சரி வேலையைப் பார்ப்போம்!
- இன்னைக்கு என்னப்பா விசேசம்? அந்தத் தலைவர் ஊழல் செஞ்சுட்டாராம்! ஓ! அடப்பாவி! சரி சரி இவங்கெல்லாம் இப்படித்தான்!, வேலையைப் பார்ப்போம்!
- இன்னைக்கு என்னப்பா விசேசம்? ஊழல் செஞ்சாங்கல்ல! தேர்தல்ல தோத்துட்டார்! ம்! அப்படித்தான் வேணும்! சரி சரி வேலையைப் பார்ப்போம்!
- இன்னைக்கு என்னப்பா விசேசம்? இந்தத் தலைவர் ஊழல் செஞ்சுட்டாராம்! ஓ! அடப்பாவி! சரி சரி இவங்கெல்லாம் இப்படித்தான்!, வேலையைப் பார்ப்போம்!
- இன்னைக்கு என்னப்பா விசேசம்? ஊழல் செஞ்சாங்கல்ல! தேர்தல்ல தோத்துட்டார்! ம்! அப்படித்தான் வேணும்! சரி சரி வேலையைப் பார்ப்போம்!
- இன்னைக்கு என்னப்பா விசேசம்? அந்தத் தலைவர் ஜெயிச்சுட்டார்! ஓ! அப்படியா? சரி சரி வேலையைப் பார்ப்போம்!
- …………..தொடரும்………… உங்களுக்கு தலை சுற்றவில்லையா?……..ஆனால் எனக்கு இதை நினைத்தால் மயக்கமே வருகிறது! இதுதாங்க! நான் சொன்ன ஏழாம் அறிவு! ஓ! மன்னிக்கவும்! ஏழரையாம் அறிவு | இயல்பில் இல்லாதது; இயல்பாய் மாறியது (7 1/2th Sense | Unusual but made Common)
மறுப்பு: இது என் தனிப்பட்ட கருத்தென்றாலும் சில இடங்களில் கடைபிடிக்க வேண்டிய, பொது கண்ணியம் மீறப்பட்டுள்ளதிற்கு மன்னிக்கவும். இது எனது மனசாட்சியின் குரல் என்றாலும், நானும் அனைவரையும் போலவே இலவசம் வேண்டும், சலுகை வேண்டும், நமக்கு விலக்கு வேண்டும், புகழ் பெற வேண்டும், பொருள் பெற வேண்டும் என்ற எண்ணமுடையவனே! எம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப்போகும் உலகை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன். ஒரு கை என்றும் ஓசை தராது. என்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, பொய், போட்டி, வஞ்சம், வன்முறையில்லா நல்லுலகம் நமது சந்ததியினருக்கு படைப்போமோ? இறையே அறியும்!