ஜெயிப்பது எப்படி?
எதில் ஜெயிப்பது?
வாழ்க்கையிலா?
படிப்பிலா?
விளையாட்டிலா?
சரி! படிப்பில் ஜெயிப்பது எப்படி?
கல்வி! முதலில் கேட்பதில் தொடங்கி மனதில் புரிந்து பதிவதில் தொடர்ந்து பின் அதைத் தேவையான பொழுது வெளிக்கொணர்வதில் வெல்கிறது!
சரி! விளையாட்டில் ஜெயிப்பது எப்படி?
விளையாட்டு! முறையான பயிற்சியில் தொடங்கி மனதில் உணர்ந்து உடலில் பழக்கப்படுத்தி பின் அதைப் போட்டிகளில் வெளிக்கொணர்வதில் வெல்கிறது!
சரி! வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி?
வாழ்க்கை! எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இதைப்பற்றி விரிவாக காணும்முன் வேறு சில அடிப்படைகளையும் பார்த்து விடுவோம்!
முதலில் ஜெயிப்பது என்றால் என்ன?
ஜெயிப்பது என்றால் அதுதான் இறுதி முடிவா?
இல்லை!
அப்படியென்றால் அது நிரந்தரமானதும் இல்லை!
நிரந்தரமில்லாத, நிலையில்லாத ஒன்றிற்கு ஏன் இவ்வளவு கவர்ச்சி?
அப்படியென்றால் மற்றவரை விட நாம் சிறந்தவர் என்ற மனோபாவத்தின் விளைவுதான் இது!
ஆக ஜெயிப்பது என்பது இறுதியானதுமல்ல !, நிரந்தரமானதுமல்ல! அது வெற்றளவீடே!
ஏன் ஜெயிக்க வேண்டும்?
பிறகு ஏன் ஜெயிக்க வேண்டும்? யாரை ஜெயிக்க வேண்டும்? இப்போது வாழ்க்கைப் பற்றி காண்போம்! கல்வி மனிதனை, மனதினை பழக்குவது – தெம்பூட்டுகிறது! விளையாட்டு என்பது உடலினை பழக்குவது – வலுவூட்டுகிறது! கல்வி, விளையாட்டு இவ்விரண்டின் அடிப்படையைக் காண்கையில், புரிதல், தெளிதல், செயல்படுதல் ஆகிய மூன்றே காரணமென்பதை உணரலாம்!
வாழ்க்கை
வாழ்க்கையும் அது போலத்தான்! நம் நிலை என்ன என்பதைப் புரிந்து நமது தேவை என்ன என்பதை தெளிந்து அதை நோக்கி முன்னேறி அவ்விலக்கை அடைவதே! அதுதான் வாழ்கையின் வெற்றி!
ஆனால் நண்பரே! வாழ்கையில் ஜெயிப்பது என்பது எந்தப் பயனும் இல்லாதது!
பிறப்பின் பயனறியாப்
பதராய் மடியும் வரை
பாரின் தலையாய் வலம் வரினும்
அரையறிவு ஜீவியும்
ஆறறிவு ஜீவியும் ஒன்றே!
வான் அளந்தோம்; கான் கடந்தோம்;
மலை வென்றோம்;
புவி உணர்ந்தோம்
என்பதெல்லாவற்றையும்விட
நாம் நம்மை உணர்வதே
வாழ்வின் வெளிச்சம்!