Story Highlights
- வாக்களிப்பது நமது உரிமை!
- நேர்மையான திறமைசாலிக்கு அவ்வாக்கை செலுத்துவது நமது கடமை!
My Vote! My Right!
ஆம்! இது நமது உரிமை மட்டுமில்லை! கடமையுங்கூட!
ஏன் தேர்தல் நடத்தறீங்க? எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் ? என்று யாரேனும் கேட்க முடியுமா?
அட அதைவிடுங்க! ஏன் தேர்தல் நடக்குதுன்னு நம்மால் கூற முடியுமா? முடியணும்! இல்லையென்றால் நாம் இந்தியக் குடிமகனாய் இருப்பதில் பயனேது?
பாரதம், ஒரு மக்களாட்சி செய்யும் நாடு! இந்திய அரசியல் அமைப்பு, பல மாகாணங்களாக ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த ராஜ்யங்களை, பாரதம் என்ற தேசத்தில் இணைத்து நிர்வகிக்கும் உரிமைகளை வரையறுத்துள்ளது! அதன்படி, அம்மாகாணங்களின் அடிப்படைகளை நிறைவு செய்யும் உரிமைகளை, அம்மாகாணங்களின் நிர்வாகத்திற்கும் (மாநில அரசு), ஒட்டுமொத்த தேசத்தின் நலன், முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றை நிர்வாகம் செய்ய ஒரு பொது நிர்வாகத்தையும் (மத்திய அரசு) தேர்ந்தெடுக்கும் உரிமையை பாரத மக்களுக்கு வழங்கியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விரண்டு அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகின்றது. ஒரு மாநிலத்தில், ஒவ்வொரு ஊரும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. அவையும் பல வகைப்படும். உதாரணத்திற்கு, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்றவை ஆகும். அந்நிர்வாகங்களும் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும், ஒரு தெரு அல்லது சில பல தெருக்கள் சேர்ந்து ஒரு பகுதி அதாவது வார்டு என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு, அவ்வூரில் உள்ள அனைத்து வார்டுகளும் சேர்ந்து ஒரு தொகுதி என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அதுவே மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதியாகும். ஒரு சட்டமன்றத் தொகுதி அல்லது சில பல சட்டமன்றத் தொகுதிகள் சேர்ந்து ஒரு மத்திய தொகுதி எனப்படும். அதாவது பாராளுமன்றத் தொகுதி எனப்படும்.
சரி! இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா?
சொல்ல வந்துட்டாரு! பெரிய . . . . . .!
உங்கள் கேள்வி மற்றும் கோபம் புரிகிறது!
ஆனால் என்ன செய்வது?
சட்டம், நீதி, நேர்மை, நியாயம் இவையெல்லாம் பேசும்போதும், படிக்கும்போதும், எழுதும்போதும் மட்டும் கடைப்பிடிக்கும் எமது உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கும் (நான் உட்பட) இந்த சீராய்வு அவசியமானதே!
1. உள்ளாட்சித் தேர்தல்
ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் அப்பகுதியின் பிரதிநிதிகளை மற்றும் அந்நகரத்தின், கிராமத்தின் தலைமைப் பொறுப்பிற்கும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
2. சட்டமன்றத்தேர்தல்
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல். இதில் ஒரு ஊர் அல்லது ஒரு ஊர் மற்றும் சில சிற்றூர்கள் அல்லது ஒரு ஊர் மற்றும் சில கிராமங்கள் மற்றும் சில சிற்றூர்கள் அடங்கியிருக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவரது தலைமையின் கீழ் மக்கள் சேவை புரிவர். அத்தலைவரை மாநிலத்தின் முதல் மந்திரி என்கிறோம்.
3. பாராளுமன்றத் தேர்தல்
ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவரது தலைமையின் கீழ் மக்கள் சேவை புரிவர். அத்தலைவரை தேசத்தின் முதல் அதாவது பிரதம மந்திரி என்கிறோம்.
இந்தத் தேர்தல்களின் நோக்கம் மற்றும் அதன் பயனாவது தேசத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும், நாட்டின் நிர்வாகத்தில் சம பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகும். இதனடிப்படையிலேயே வார்டுகள், சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
கட்சிகள்
தனி நபர்கள் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும் நிலை, அடிமைப்பட்டுக்கிடந்த மக்கள், சுதந்திரம் பெற்ற போது நிலவவில்லை. ஏன் இன்றும் கூட அந்நிலையை நாம் எட்டவில்லை. சுதந்திரத்திற்கு பாடுபட்ட அணியினரே, தேசத்தின் காவலர்கள், தலைவர்கள் என்ற நிலை அக்காலகட்டத்தில் நிலவியதால், எந்த ஒரு தனி மனிதனும் சுயமாக தேர்தலைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. சந்தித்திருந்தாலும் தோல்வி தான் கிட்டியிருக்கும் (அப்படி தேர்தலில் நிற்பதுங்கூட தேசத் துரோகமாகவே நினைக்கப்பட்டிருக்கலாம்). எனவே, மாற்று சக்தியுங்கூட ஒரு அணியாக – கட்சியாகவே உருவாயிற்று. கட்சி என்றவுடன் அதன் தலைவரே பெரும்பாலும் முதல் அமைச்சர் என்பதும் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அதன் வேட்பாளர்களின் தகுதி, திறமை, நேர்மை கருத்தில் கொண்டு வெற்றிகள் தீர்மானிக்கப்பட்டன.
தொடர்கதை
வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது என்று பொய்க்கதை சொல்லி நமது மனமாற்றங்களுக்கு வடிகால் தேடிய முன்னோர்கள், மெல்ல மெல்ல, நன்மை, நல்லவை, நேர்மை ஆகியவற்றிலிருந்து விலகி தீமை, தீயவை, கயமை குணம் கொண்ட தலைவர்களின் எச்சில்களுக்கு கையேந்தியதால், தேசமே கடனாளியாகவும், தேசத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல்களும் மலிந்துவிட்டன. இதற்குக் காரணம் ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல. தமது உரிமையான கடமையைச் செய்யாத துரோகிகளும் தான். என்ன? ஓட்டுப் போடாதவர்கள் துரோகிகளா? ஆம்! நிச்சயம் துரோகிகளே! நன்மை செய்யாவிடினும், தீமை அரங்கேற, வழி விட்டு, கண்டும் காணாமல் போவதும் துரோகமே!
My Vote! My Right!
ஆம்! நமது வாக்கு நமது உரிமை! நம் சார்பாக நமது பிரச்சினைகளைத் தீர்க்க, நமக்கு வளர்ச்சி ஏற்படுத்த, நம்மைக் காக்க, நாம் ஒருவரை ஆதரிப்பது நமது உரிமை. அவரின் குணம், அறிவு, திறன், நேர்மை இவற்றைத் தெரிந்து, தேர்ந்தெடுப்பது நமது கடமை.
சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
Think and Vote!
உங்கள் தொகுதி வேட்பாளர்களில் யார் மீதும் நம்பிக்கை இல்லையெனிலும் கட்டாயம் வாக்களியுங்கள் – “எனது வாக்கு யாருக்கும் இல்லை” என்பதை பதிவு செய்யுங்கள்!