Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

போர்! போர்! போர்! – பகுதி 1

இனியவன்

Story Highlights

  • குறுந்தொடர்கதை

இனியவனுக்கு ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருந்தது. இப்போது போர் நடந்து கொண்டிருக்கிறது! அவனுக்குப் புரியவில்லை. எங்கே, யார், யாருடன் போர் செய்கின்றனர்? அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு பேரொலி கேட்டது. மக்களெல்லாம் துள்ளிக்குதித்து ஓடினர். பலர் தங்களருகில் இருந்த கட்டிடங்களின் கீழ் ஒளிந்து கொண்டனர். அந்தச் சத்தம் சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே வந்தது.

போர்! போர்! போர்! – பகுதி 1

 

ஆம்! இந்த நாட்டின் மீது எதிரிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று பக்கத்து வீட்டு மாமா, அன்று தான் அவரிடம், இல்லை! அவர், எங்கள் தந்தையிடம் பேசுவதை முதல் முறையாகக் கண்டேன்! நெடும்நாட்கள் பழகியவர்கள் போல் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டே அக்கறையோடு பத்திரமாகப் பார்த்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதைக் கண்டு கொண்டிருக்கும் போதே, இனியவனுக்கு தனது கன்னத்தில் ஒரு மென்மையான அழுத்தம் உணர முடிந்தது. அவன் சொக்கியே போனான்!

அந்தச்சத்தம் ஒரு ராக்கெட்டிலிருந்து வந்தது. (அது ஒரு ஏவுகணை!) அது அந்தப்பகுதியை அழிக்க வந்தது. ஆனால் பொம்மைத் தொடர்களில் பார்த்தது போல் எங்கிருந்தோ இன்னொரு ஏவுகணை வந்து அதை வானத்திலேயே வெடிக்கச் செய்தது! திடீரென்று இனியவனின் முகம் முழுவதும் அழுத்தப்படுவது போல் உணர, திணறி எழுந்தான். அங்கே அவன் தந்தை மலரவன் முகமலர்ச்சியோடு தன் மழலைச் செல்வத்தை நோக்கிக் கொண்டிருந்தான்.

பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டபடியால், அவனும், அவன் தந்தையும் கிளம்பத் தயாராயினர். அவன் தங்கை மலர்க்கொடி, அவன் தாய் கயல்விழியுடன் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்!

இனியவனுக்கு ஒரே ஆச்சரியம்! இவ்வளவு நேரம் நாம் கண்டது கனவா? அப்படியென்றால் போர் வரவில்லையா? அவன் குழப்பத்தையும் காலை நேர மந்தத்தையும் குறிப்புணர்ந்த மலரவன், தன் செல்வதைக் கொஞ்சிக் கொண்டே வினவினான். ‘போர் என்றால் என்ன அப்பா?’ என்ற இனியவனின் கேள்வி மலரவனை மலைக்கச் செய்தது.

சரி! இந்தக் கேள்வியின் காரணம் அறியாவிடில், அவன் பிஞ்சு மனம் புரியும் விதத்தில் பதில் சொல்ல இயலாது என்றுணர்ந்த மலரவன் அவனை சமாதானம் செய்யும் படியாக, ‘மாலை பள்ளியிலிருந்து வந்ததும் இது பற்றி விவாதிப்போம்!’ என்று பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தினான்.

ஒரு வித ஏமாற்றத்தோடே, அரைமனதோடு, இனியவன் கிளம்பினான். மலரவனுக்கும் மகனின் எண்ணவோட்டம் புரியாமலில்லை. காலை உணவு உண்டு கொண்டே தொலைக்காட்சியில் செய்திகளை நால்வரும் பார்த்தனர். அதில் திரும்பத் திரும்ப  ஒளிபரப்பாகிய செய்தி நறுக்கென்று மலரவனுக்கு ஒரு புத்தி கொடுத்தது. ‘அச்செய்தி: இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன’. இது நேற்று முன்தினச் செய்தியாயிற்றே! இதை இன்று ஏன் ஒளிபரப்புகின்றனர்? என்ற எண்ணமே மலரவனுக்குக் கோபத்தை வரவைத்தது.

மூவரும் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பியபோது அதில் இருவர் மனதில் ஓர் சிந்தனை யுத்தம் தொடங்கியிருந்தது!

தொடரும்…

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *