Story Highlights
- குறுந்தொடர்கதை
உலகம் அனைவர்க்கும் பொதுவானதன்றோ! நாம் அனைவரும் நம்மைப் பற்றி மட்டுமே நினைக்கிறோம்! நம் சார்ந்த விசயங்களில் மட்டுமே மற்றவரைப் பார்க்கிறோம்; யோசிக்கிறோம்! நமது செயல்கள் நம்மையுமறியாமல் மற்றவர்களின் மனதில் ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்து கொண்டால் உலகில் சண்டை என்பதே இல்லாமல் போகும்!
போர்! போர்! போர்! – பகுதி 2
சிந்தனை யுத்தம் இருவர் மனதில் அல்ல, நால்வர் மனதிலும் தொடங்கியாயிற்று! ஆம்! மலர்க்கொடியும் கயல்விழியும் கூட இனியவனின் கேள்வியில் குழப்பமடைந்து விட்டனர். மலர்க்கொடி அண்ணன் கேட்ட போர் என்றால் என்ன? என்பதே அவளுக்கு புரிய வில்லை. அவன் என்ன கேட்டான்? அதற்கு தந்தை என்ன சொல்வார்? என்பதை இரவு வரை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பள்ளி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மறந்து தன் தோழிகளோடு கலந்து விட்டாள்.
இனியவனுக்கோ, தந்தை ஏன் மாலை சொல்வதாகக் கூறினார்! போர் என்றால் என்ன? அவ்வளவு தானே! சொன்னால் நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்! அப்படியென்றால் அது மிகப்பெரியதோ! அதனால்தான் அப்பா மாலை சொல்வதாகக் கூறினாரோ? அவனும் பள்ளிப் பாடங்களில் சிறிது நேரத்தில் மூழ்கிவிட்டான்!
மலரவனுக்கோ, இந்த சமுதாயத்தின் விடிவெள்ளிகள் போல் செயல்படும் ஊடகங்களின் மீதும் அவற்றை கையாளும் சமூகப் பொறுப்பற்ற நிர்வாகிகளின் மீதும் கோபமே மேலோங்கியது! “அந்நியரின் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழித்து வெற்றிகரமாக திரும்பி இராணுவம் தீரச்செயல்!” என்ன ஒரு கயமை? யார் நாட்டிற்குள் யார் புகுந்து திரும்பினர்! முட்டாள் ஊடகங்களே நமது நாட்டை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்து விட்டான். அங்கு இருந்து கொண்டு நமக்கு எதிரான செயல்களை அரங்கேற்றுகிறான்! ஆனால் என்னவோ அந்நியனின் நாட்டுக்குள் புகுந்து சாதித்தாக பொய்ச்செய்தி வெளியிடுகிறீர்கள் என்று மூடர் ஊடகத்தின் மேல் கடுங்கோபத்தில் இருந்தான். அவன் தவிப்பு மூன்றே மூன்று தான். 1. அரசியல் வேடதாரிகளால் நாடு தாரை வார்க்கப்பட்ட துரோகத்தைச் சொல்லவா? 2. சுய லாபத்திற்க்காக வீரர்களை பலி கொடுக்கும் கேவலமான வாக்கு வங்கி தந்திரத்தைச் சொல்லவா? அல்லது 3. பிணக்குவியல்களைக் கூட படம் பிடித்து பணம் பார்க்க நினைக்கும் ஈன ஊடகங்களின் இழி நிலை சொல்வதா? அவன் தடுமாற்றத்தோடு பணிகளைத் தொடரலானான்!
கயல்விழி, வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மதிய உணவுக்கான சமையல் வேலைகளை செய்து கொண்டே, துவைக்கும் பணிகளையும் இயந்திரத்தில் விட்டுவிட்டு, தொலைக்காட்சியில் பாடல்களை ஒளிக்க விட்டு, சிறிது காலை உணவு உண்ணத்தொடங்கினாள்! இனியவனின் கேள்வியும் மலரவனின் தடுமாற்றமும் அவளுக்கு புதிதாய் இருந்தது! மெதுவாக தொலைக்காட்சியில் செய்திகளை கவனித்தாள்! எல்லா தொலைக்காட்சியிலும் ஒரே மாதிரியான செய்திகள் சிறிது வார்த்தைப் பிரயோங்களில் மட்டும் வேறுபாடு!
அவளுக்கு சட்டென்று தோன்றிற்று! ஏன் அனைத்து தொலைக்காட்சி நிலையங்களும் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் நமக்கு கொடுக்கின்றன?. ஒரே நேரத்தில் விளம்பரங்கள், ஒரே நேரத்தில் செய்திகள், தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்! ஆக்கிரமிப்பு பகுதியில் நடந்த தாக்குதல் என்று விவரிக்கின்றனர்! ஆனால் முக்கிய அறிவிப்புகளின் போது இராணுவம் அந்நிய மண்ணில் வீர தீரச் செயல் என்கின்றனர்!
இதற்கு பதில் மலரவனிடம் இருந்து தான் கிடைக்கும் என்பதால், தன் பணி முடித்து, சிறிது ஓய்வு எடுக்க எண்ணி, அனைத்து பணிகளையும் முடித்து, தனக்குப் பிடித்த நெடுந்தொடரின் நாயகியின் வாழ்க்கைக்குள் குதித்து மறைந்தாள்!
குடும்ப வாழ்க்கை என்பது எவ்வளவு அழகானது? அர்த்தமுடையது? ஆனால், அரசியல், வியாபாரம், கௌரவம் போன்ற காரணிகளால் எந்த அளவிற்கு குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது?