அன்புள்ள மகனுக்கு!!!
இந்தப் பதிவுக்கு மறுப்பு – பொறுப்பு துறப்பு எதுவுமில்லை! முதலில் இதைப் பொதுப்பதிப்பாகவே பதிவிட நினைத்தேன்! ஆனால்! என்னைப் போன்ற அனைவரின் எண்ணப்பிரதிபலிப்பாக இருக்க வேண்டியே இத்தலைப்பு!
அன்புள்ள மகனுக்கு!
என்னகவை முப்பத்தாறு!
எனில்
என்பயணம் இவ்வுலகில்
36 ஆண்டுகள்!
மழலையாய் வாழ்ந்த போது
மனம் மகிழ்ந்த கணங்கள்
இன்று துளியும் நினைவிலில்லை!
மனம் கனத்த நினைவுகள்
சொல்லி மாளவில்லை!
வாழும்போது அனுபவிக்கும் நல்லவை
அக்காலம் கடந்தபின் நினைவிலில்லை!
வாழும்போது விலக நினைத்த
இடர்கள் இன்று வடுக்களாய்!
வழிகாட்டும் துணைவனாய்!
அன்புள்ள மகனுக்கு!
நீ நுகரும் நல்லவையை
தைரியமாய் கடந்து செல்லப் பழகு!
அதில் பெருந்தன்மை கொண்டு நழுவு!
நீ எதுவும் கொண்டு வரவில்லை
அதனால் இழப்பெதுவுமில்லை உனக்கு!
யார் மீதும் நம்பிக்கை கொள்ளாதே
யாரையும் சந்தேகம் கொள்ளாதே!
நம்பிக்கை, சந்தேகம் இரண்டும்
எதிரெதிராயிற்றே.. எப்படி?
ஆம்! எதிர்ச்சொற்கள்தாம்!
பொருந்துமிடம் காண்!
யார் சொல்வதையும் நம்பாதே!
காலம் ஒரு மனிதனை – உன்னையும் சேர்த்துதான்
தேவை, ஆசை, கோபம், துரோகம், வஞ்சம்
துணைகொண்டு பொய்யுரைக்கவும் செய்யும்!
கொய்தொழிக்கவும் செய்யும்!
நன்மையும் செய்யும்தான்!
அதைப்பற்றியெண்ணி மகிழாதே!
கடந்து செல்லக் கற்றுக்கொள்!
யாரையும் சந்தேகம் கொள்ளாதே!
உன்முடிவை நீயே எடு!
அதற்கு பிறர் காரணமோ என்று
சந்தேகம் கொள்ளாதே!
நம் தவறை உணர்வதே
நமது முதல் பாடம்
நம்மை மீறி நமக்கு யாரும்
நன்மை – தீமை செய்து விட முடியாது
நன்மைகளை கடந்து செல்வது
நான் சொல்லியது போல் எளிதல்ல!
அதற்கு மனதை பழக்கப்படுத்து!
அன்புள்ள மகனுக்கு!
பாலகனே!
பார்த்ததையெல்லாம் விரும்பும்
பருவம்!
நினைத்ததையெல்லாம் செய்யத்
தோன்றும் பருவம்!
ஆம்!
வீரம் என்பது இங்கிருந்தே
உணரப்படும்!
பாலகன்! வினை அறியா வயதில்
செயல்புரிதல் வீரமன்று!
எண்ணிய செயல் எண்ணிய
வண்ணஞ்செயல் வீரமே!
எண்ணியாங்கு செய முயல்தல்
கூட வீரமே!
மனம்! அது மனிதனை
மனிதனாய், மனிதரில்
தெய்வமாய், கடவுளின்
கருணையாய், கருணையின்
பயனாய், எங்கும் நிறைந்திருப்பது!
வளரும்போதே! வளர்ந்து விடு!
ஆம்! மனதிலும்!
நாங்கள் தோற்ற துறை இதுதான்!
நாங்கள் யாரென்று தெரியுமா?
உனது அப்பாக்கள் – என் தலைமுறைகள்!
எனது அப்பாக்கள் – உனது தாத்தாக்கள்!
எனது தாத்தாக்கள் – உனது பாட்டன்கள்!
ஆம்! எம்குல மகிமையும் மறந்தோம்!
எம்குல திறைமையும் துறந்தோம்!
எம்குல வாழ்வையும் தொலைத்தோம்!
அன்புள்ள மகனுக்கு!
பணம், புகழ், பழி கைக்கொண்டோம்
எனில்
உங்களுக்கு இவ்விருள்சூழ் நரகம் செய்தோம்!
பணம்! எம்மனிதர்களை மனம், உடல்
என பிரித்து சவம் செய்தபோதும்
அந்நியரின் தலைமீதே பழி செய்தோம்
அதை நீக்கும் கடமையை புகழாய்
அணிந்து கொண்டோம்!
அரசு- அரசியல் அது சாக்கடை என்று நாங்கள்
அறைகூவல் விடுத்தோம்
ஆனால்! அவசியமெனில் அதிலும்
அவலங்கள் செய்தோம்!
எங்களை மன்னித்து விடுங்கள்
என்றென்றும் கூற மாட்டேன்!
இன்றும்கூட இன்னுங்கூட
நாங்கள் திருந்தியதாய்க்கூற
நா தழுதழுக்கிறது!
எங்கள் செயல்களின் விளைவுகள்
எங்களை சோதிக்கிறது!
ஆம்!
நேர்மை, உண்மை, மாண்பு
எங்கள் மனதிலும் செயலிலும்
எள்ளளவும் இல்லாமல் போனதும்
பணம், புகழ், பழி மோகம்
எங்கள் நினைவுகளில் இயல்பாய்ப்
போனதும்
வருங்காலம் – நீங்கள் மட்டுமல்ல
எமது பேரன்களும் அவர்களின் பேரன்களும்
பழி சொல்ல வேண்டிய
இழி நிலையே இன்று செய்திருக்கிறோம்!
ஆகவே மகனே!
புரிந்து கொள்!
அன்புள்ள மகனுக்கு!
உம் அப்பாக்கள் – நாங்கள்
திருந்தவில்லையெனினும்,
உணர்ந்து கொண்டோம்!
உன்னை நீயே செதுக்கிக் கொள்!
உனக்கென்று ஒரு விதி செய்துகொள்!
அது பொது விதியை மீறாவண்ணம் செய்!
யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
எதிர்பார்ப்பு தான் ஒரு மனிதனை
எதிரியாக்கும் முதல் துரோகி!
ஒவ்வொருவருக்கும் ஒரு
கனவு, ஒரு இலட்சியம்
ஒத்துக்கொள்! மதிக்கக் கற்றுக்கொள்!
நீ மற்றவரிடம் எதிர்பார்க்கும் ஒன்றை
மற்றவர்க்கு நீ செய்ய முயற்சி செய்!
மனங்களை ஒளித்து
மனிதத்தைப் புதைத்து
தொழில் – வியாபாரம் என்ற போர்வையில்
நாங்கள் நடத்தும் கோரங்கள்
எங்களோடே மாயட்டும்!
எங்கும் எதிலும்
இவ்விரண்டே அடிப்படை
நல்லவை, கெட்டவை!
அன்புள்ள மகனுக்கு!
எது நல்லவை?
எது கெட்டவை?
எளிமையாய் உணர்ந்து கொள்!
உனக்கு சாதகமாய்
உன் எண்ணப்படி
விளைபவை யாவும் நல்லவை!
பாதகமாய் போவபை யாவும் கெட்டவை!
நல்லவை!
நீ முயற்சித்து முடித்திருந்தாலும்
அதுவே தானாக முடிந்திருந்தாலும்
அவற்றை பெருந்தன்மையுடன்
கடக்கப் பழகிக்கொள்!
கெட்டவை!
நீ முயற்சித்து இழந்திருந்தாலும்
சூழ்நிலையால் ஏற்பட்டிருந்தாலும்
மனதில் பதிந்துகொள் இதுவும்
நன்மைக்கே!
கடமை என்ன?
கருமம் என்ன?
யாருமறியோம் புரிந்து கொள்!
புரிந்தவர் யாரும் புகட்டவுமில்லை
தெரிந்துகொள்!
மனிதராய்ப் பிறந்து
இறையாய் உயர்வதே
இவ்வுலக வாழ்வின் இறுதி நோக்கம்!
அன்புள்ள மகனுக்கு!
நீ ஆணா? பெண்ணா?
என்பது கருத்தன்று!
அது உடல் சம்பந்தப்பட்டது,
இவ்வுலகோடு முடிந்துவிடும்!
நீ மகனா? சகோதரனா?
தந்தையா? மாமனா?
அது அந்தந்த உறவோடு
அடங்கி விடும்!
நீ தமிழனா? இந்தியனா?
குலமா? ஜாதியா?
இவை பிராந்தியங்களோடு
இறந்து விடும்!
நீ பெயரா? உயிரா?
உன்னோடு முடிந்து விடும்!
புரிந்து கொள்!
முன்னே பிறந்தவர் யாரும்
முதலாய், முடிவாய்க் கண்டது
ஒன்றே!
இங்கே இருப்பவர் யாவரும்
காண்பதும் ஒன்றே!
மாறி வரும் காலங்கள்,
முன்னேறி வரும் ஜாலங்கள்
யாவும் மாறாத தெய்வத்தின்
கட்டளைப்படி
கட்டுப்பட்டே தீரவேண்டும்!
இங்கே வாழும் வரை
யாரிடமும் எதிர்பார்ப்பு வைக்காதே!
அது உனக்குள் ஒரு முறையாவது
துரோகத்தை கொண்டு வரும்!
எல்லாவற்றையும் நம்பாதே!
உன் முடிவின் படியே துய்க்கப்பழகு!
அன்புள்ள மகனுக்கு!
நம்பு! நான் யாருக்கும் தீங்கிழையேன்
எனில் எத்தீங்கும்
எனை எரிக்காதென்று!
உன்னைப் பற்றி மட்டுமே சிந்தி!
உலக வாழ்வின் நெறி தவறா வாழ்வே
உன் தவமாய் அமையட்டும்!
இது என் மகனாகிய அனைவருக்குமே!
புரிதலுக்காய் மகனென்றேன்!
அனைத்து மழலைச் செல்வங்களுக்குமே!
ஒவ்வொரு தனி மனிதனும்
பொது வாழ்வின் மாண்பு காத்து
தனிமனித ஒழுக்கம் பேணுகையில்..
எம் சமுதாயம் பண்பட்டதாய்
மாறும்!
என் செல்வங்களே!
உங்களிடம் மன்னிப்பு
கேட்க மாட்டேன்!
இதோ நானும்
மாற, மாறும் முயற்சியினைத்
தொடங்கிவிட்டேன்!
இதோ உங்கள் முதல் தந்தை!
இவ்வழியில்!
பின் இணைவர் அனைவரும்!
நல்வழியில்!