Types of Forces
எனது மகளின் செய்முறைக்காக ‘Types of Forces’ என்ற Stickerஐத் தேடிக்கொண்டிருந்தோம்! ESI மருத்துவமனை அருகில் ஒரு கடைக்குச் சென்றபோது, வண்டியை நிறுத்தும்போது ஒரு பெரியவர் ஒரு வாடிக்கையாளரிடம் யாசகம் செய்து கொண்டிருந்தார். அந்த நண்பரிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியவில்லை! அந்த நண்பர் மிகவும் சத்தமாக அதட்டினார்!
ஒருவழியாக அந்த Stickerஐத் தேடிப்பிடித்து வாங்கி வந்து வண்டியை எடுக்கும்போது அந்தப் பெரியவர் என்னிடமும் வந்து, வயிற்றையும் வாயையும் காண்பித்து யாசகம் – சைகையில் செய்தார். வண்டியை எடுத்து விட்ட எனக்கும் கோபம்தான். ஆனாலும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்றபோது மறுபடியும் சைகையிலேயே யாசித்தார்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலிருந்த Bakeryக்குச் சென்று, ஒரு தேங்காய் பன் வாங்கி 10ரூ தாளை நீட்டினேன். கடைக்காரர் 7ரூ போக மீதி 2 – ஒரு ரூபாய் நாணயங்களும், ஒரு ரூபாய்க்கு இனிப்பும் தந்தார். “இப்படி செய்வதற்கு யாசகமே மேல்” என்று கடைக்காரர் குறித்து வெதும்பி விட்டு இதையும் வைத்துக்கொள்ளுங்கள். நான் மீதி பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று விட்டு வந்து, அந்த தேங்காய் பன்னை அம்முதியவரிடம் நீட்டினேன்!
ஈயென இரத்தல் இழிந்தன்று! – புறநானூற்றுப் பாடல் ஏனோ நினைவிலோடியது!
அவர் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்! முன்பு சைகையில் யாசித்தவர், தெளிவாகப் பேசினார்!
இனிப்பு ஆகாது! எனக்கு ‘Sugar” இருக்கு! நாலு இட்லி வாங்கிக்க காசு கொடுக்க கேட்டார்!
எனக்கு ஒரு நொடிப்பொழுது ஒன்றும் புரிய வில்லை. பின் சமாளித்து எதுவும் பேசாமல் அந்தப் பன்னோடு கிளம்பி வந்து விட்டேன்! ஒருவேளை அவருக்கு என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கி கொடுத்திருக்க வேண்டுமோ? என்ற எண்ணம் கூட எழுந்தது.
வீட்டில்,
அந்த ஒரு பன்னை, குழந்தைகள் ஒன்றென்றாலும் ஆர்வத்தோடு உண்டதைக் கண்ட போது, ஆச்சர்யம்! அதைவிட, மாலையில் மகன் தனது நண்பனுக்கு பரிசளிக்க பொருள் வாங்க 10ரூபாவை கொஞ்சிக் கொஞ்சி, கெஞ்சிக் கெஞ்சி கேட்டும் இரவில் தருவதாய்ச் சொன்னதும், அவன் இரவில் இப்போது அதே போன்று கேட்டதும் வலித்தது இதயம் மட்டுமல்ல மனதும்தான்!
என்ன உலகமடா! இது! மனித மாண்பும், தனி மனித சுய மரியாதையும், நேர்மையும் ஏழ்மையால் தொலைய வில்லை! ஆனால் சோம்பேறித்தனத்தால் மறைகிறது!