Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
World’s Best Traffic Police – Tirupur Traffic Police
பதிலில்லா கேள்விகள்!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
ஒரு ஊரில் மக்கள் எவ்வளவு முட்டாள்களாய், சுயநலம் மட்டுமே பிரதானமாக இருந்தால் அரசாங்க இயந்திரம் மற்றும் அதன் இயக்குநர்கள் மக்களை சுற்ற விடுவார்கள் என்பது திருப்பூரில் நிரூபணமாகி வருகிறது.
இந்தியாவின் சிறந்த போக்குவரத்துக் காவல் – திருப்பூர் போக்குவரத்துக் காவல்!
போதுமான தரத்தில், அளவில் சாலைகள் இல்லை! இருக்கின்ற சாலைகளில் போக்குவரத்து அதிகம்! இங்கே தான் எமது திருப்பூர் போக்குவரத்துக்காவல்துறையின் புத்திசாலித்தனம் அறியப்படுகிறது.
இருக்கின்ற பெரிய சாலைகள் என்றால்..
- ஊத்துக்குளி சாலை
- பெருமாநல்லூர் சாலை
- அவினாசி சாலை
- பல்லடம் சாலை
- தாராபுரம் சாலை
- மங்களம் சாலை
- காங்கேயம் சாலை
இந்த 7 சாலைகளும், அதன் வாகன வாசிகளும் சிரமப்படக் கூடாது என்பதற்காக எங்கள் திருப்பூர் போக்குவரத்துக் காவல்துறை செய்திருக்கும் சாதனைகளைப் பார்ப்போம்!
௧. ஊத்துக்குளி சாலை
ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சாலை தற்சமயம் பயன்பாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உபயம்: நெடுஞ்சாலைத் துறை மற்றும் திருப்பூர் மாநகராட்சி. (TMF Hospitalக்கும், மாநகராட்சிக்கும் என்ன சண்டை என்பது தனிக்கதை!, கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்க்கும் மாநகராட்சிக்கும் என்ன சண்டை, ஏன் இரட்டைக்கண் பாலம், சாக்கடை கழிவு ஓடையாக மாறியது என்பது ஒரு வேறு நாறிய கதை!), தற்சமயம் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து ஊத்துக்குளி சாலை பயன்பாட்டில் உள்ளது. அந்த 500 மீட்டர் தூரத்தைக் கடக்க வெறும் ஒரு கிலோமீட்டர் சுற்றி வந்தால் போதும். வசதியே இல்லாத இந்த சாலை – ஒரு வழிச்சாலை என்பது கூடுதல் சிறப்பு (1 கிலோமீட்டர்) திருப்பூர் வரும் வாகனங்கள் NRK புறம் ரயில்வே கேட்டில் இடதுபுறம் சென்று சுற்றி வரவேண்டும்.
௨ & ௩. பெருமாநல்லூர் – அவினாசி சாலை
பெருமாநல்லூர் மற்றும் அவினாசி சாலையின் நிலையோ இன்னும் ஒரு படி மேல். கடந்த இருபது வருடங்களாக P.N ரோடு மேட்டுப்பாளையத்திலிருந்து புஷ்பா தியேட்டர் – ரயில் நிலையம் வரை ஒரு வழிச்சாலை (கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் – நகர்ப்புறத்தில்). அவினாசி சாலையும் ஒரு 200 மீட்டர் ஒரு வழிச்சாலை. கீழ்காணும் படத்தில் இடையிடையே குறுக்குச்சாலைகள் உண்டு. ஆனால் கடந்த 2 நாட்களாக, குறுக்கே செல்ல இயலாது. இடது புறமிருந்து வலது புறம் திரும்ப, வலது புறமிருந்து இடது புறம் திரும்ப கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் சுற்ற வேண்டும்.
திருப்பூர் போக்குவரத்து காவலின் சாதனைகளை முழுவதும் சொல்ல ஒரு நாள் போதாது. திருப்பூரின் மற்ற சாலைகள் மற்றும் அதன் கட்டமைப்பும் ஒன்றை மிஞ்சும் மற்றொன்று ரகம். ஒரு பானைச்சோற்றிற்கு ஒரு சோறு பதம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,
எங்கள் திருப்பூர் போக்குவரத்துக் காவலின் சாதனை இரகசியம் இது தான்!
- ஒரு சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கிறதா? உடனே அதை ஒரு வழிச்சாலையாக மாற்றிவிட வேண்டும். முக்கியமாக எந்த திசையில் அதிகமாக போக்குவரத்து இருக்கிறதோ, அதற்கு எதிர் திசையில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் அந்த சாலையில் ‘ரோந்துப் பணியோ, போக்குவரத்துச் சீரமைப்புப் பணியோ மேற்கொள்ள காவலர்களை ஈடுபடுத்த வேண்டியதில்லை. எப்படியும் இரு சக்கர வாகனங்களும், சில பெரிய வாகன ஓட்டுனர்களும் விதி மீறி செல்வர். எப்போது தேவையோ அப்போது பிடித்துக் கொள்ளலாம்.
- ஒரு வழிச்சாலை செய்ய முடியலையா? ஒண்ணும் பிரச்சினையில்லை. 2 வண்டி செல்லும் சாலையில் நடுவே கான்க்ரீட் டிவைடர் வைத்து விட்டால் போச்சு. வேற வழியே இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக, நின்று நின்று, சென்று தான் ஆகவேண்டும்.
- அப்புறம் முக்கியமான சமுதாயப்பணியைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். வாகன வாசிகள் மது அருந்தி விட்டு வாகனங்கள் செலுத்தி விபத்துகள் ஏற்படுத்துவதை தவிர்க்க, மதுபானக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து ஒரு 500 மீட்டர் தள்ளியிருந்து, குடித்துவிட்டு வந்தவுடன் பிடித்து தண்டித்தால் அவர்களால் விபத்து ஏற்படாதல்லவா? இது எவ்வளவு பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை?
அப்புறம் கடைசியாக ஒன்று! மக்களாகிய நாங்களும் ஒழுக்க சீலர்கள் அல்ல! அடுத்தவருக்கு சிக்னல் விழுந்தாலும் நாங்க முந்திட்டு போவோம்! ஏன்னா? அந்த 10 செகண்ட்ல பல கிரகத்துக்கு போயிட்டு வருவோம். ‘ஒன் வே’ யாவது மண்ணாவது! யாருகிட்ட? எங்க வழி! எங்க இஷ்டம்! எத்தனை டிவைடர் போட்டாலும், சந்துல பூருவோம்.
எங்களோடது MANUFACTURING DEFECT!
இப்படித்தான் இருப்போம்!
இல்லைன்னா! எப்படி எங்க போலீச
பேர் வாங்க வைக்கறது!