Story Highlights
- Vel's View
VView: Bigg Boss Tamil – Season 1
VView: Vel's View of Bigg Boss Tamil - Season 1
மறுப்பு மற்றும் பொறுப்பு துறப்பு / Disclaimer
-
இப்பதிவின் கருத்துக்கள் முழுக்க எம்முடைய எண்ணத்தில் / பார்வையில் உருவானவை! இதில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லையெனினும் செயல்களின் எதிர்வினையாய் கோபப்பதிவுகள் மனம் நோகும்படி அமையும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே நல்லுள்ளங்கள் பொறுத்தருள்க! / THIS POST IS THE RESULT OF OUR OWN VIEW! WE HAVE NO INTENTION TO DEFAME OR INSULT ANY INDIVIDUAL. HOWEVER THE NATURAL REACTION MAY GIVE RESEMBLANCE TO TEASE ONE’S MENTAL COMPOSURE. HENCE FORGIVE US FOR THAT!
முதலில் இந்தப் பதிவு தேவையா? நமக்கு வேறு வேலை இல்லையா? உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது! ஆனால் அது மேலோட்டமானது! அதை இப்பதிவின் இறுதியில் உணர்வோம்! சரி அப்படியென்றால் இப்போதே இறுதிப்பத்தியை பார்த்துவிடலாமே! நேரம் மிச்சம்! அப்படியும் செய்யலாம்! ஆனாலும் இழப்பு நமக்கே! அதனால் இப்பதிவை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெறுமனே நேரத்தை செலவழிக்க மட்டும் என்று எண்ணித் தொடர்க! நிச்சயம் ஒரு புது பார்வை கிட்டும்!
சாதனைகளும் வாழ்த்துகளும்
ஸ்டார் விஜய்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு நாம் ஒரு பெரும் வாழ்த்து மற்றும் பாராட்டும் சொல்ல வேண்டும்; இந்த நிகழ்ச்சியை தமிழில் கொண்டு வந்ததற்கு! இது ஒரு குறிப்பிடத்தக்க மிகப்பெரிய சந்தை மாற்ற சாதனையே; சின்னத்திரை வரலாற்றில்!
நடிகர் கமலஹாசன்
ஒரு புது நிகழ்ச்சி!, விதிமுறைகள் புரியாத போட்டி, வரைமுறைகள் தெரியா பார்வையாளர்கள் மற்றும் வெளிச்சம் தேடி வந்த வீரர்கள் (போட்டியாளர்கள்), இவர்களை கையாள வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு, இவற்றை நடிகர் திரு. கமலஹாசன் சிறப்பாக செய்து முடித்துள்ளார்! பல நேரங்களில் அவர் காட்டிய தமிழ் ஆளுமை நடிகர் என்பதைத் தாண்டியும் இரசிக்கச் செய்ததென்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. வாழ்த்துக்கள்!
முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்
இந்நிகழ்ச்சியின் முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகியோருக்கு தீபாவளிக்கு முன்பே தீபாவளி தான்! இந்த நிகழ்ச்சியின் வெற்றி மூலம்!
போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள், இருந்தாலும், வெளியேறியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் வரவேற்பும், புகழும் எட்டியுள்ளனர் (சிலர் அதற்கு தகுதியுடையவராய் இல்லாவிடினும்)
வியாபாரம் மற்றும் பிரபலம்
இந்நிகழ்ச்சியின் மூலம் அனைத்து முதலீட்டாளர்களும், விளம்பரதாரர்களும் தங்கள் வியாபாரத்தை நன்கு பிரபலப்படுத்திக்கொண்டுள்ளனர்! வழக்கம்போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் மக்கள் அபிமானத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
சரி! இதுவரை ஒரு பொதுப்படையான கருத்தோட்டத்தைக் கண்டோம்! இவற்றை மனதில் கொண்டு, இது ‘Bigg Boss’ துதிபாடிப் பதிவு என்ற எண்ணம் எழலாம்! தவறில்லை! விருந்தோம்பல் முடிந்தாயிற்று! இனி சோதனைகளையும், வேதனைகளையும் அதற்கான குட்டுக்களையும் காண்போம்!
VView: Bigg Boss Tamil – Season 1
நிகழ்ச்சியின் தரம்
விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அவற்றைக் கடைப்பிடிக்க வைக்க கையாண்ட யுக்திகள் பெரும்பாலும் வியாபார நோக்கிலோ அல்லது சம்பந்தப்பட்ட போட்டியாளரின் பிரபலத்தைப் பொருத்தோ, அல்லது அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவைப் பொருத்தோ அமைந்திருந்தன! கடைபிடிக்க விதிகள் கடுமையாக இருந்த அளவு பெரும்பாலும் போட்டியாளர்கள் தங்கள் சௌகரிய நிலைகளிலிருந்து வெளியே வரவில்லை என்பதே உண்மை! 24 x 7 பதிவு வெறும் 1 மணி நேரம்தான் தினமும் காண்பிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கேற்றாற்போல் ‘எடிட் செய்து – தொகுத்துக்’ காண்பிக்கிறோம் என்ற ஒற்றை வாக்கியத்திற்குள் சௌகரியமாக ஒளிந்துகொண்டு, மக்கள் மனமறிந்து, அவர்களின் ஆவலைத் தூண்டும்படி தொகுக்கப்பட்டது, ஒரு விதமாக, நேர்த்தியாக படம்பிடிக்கப்பட்ட குறும்பட உணர்வை ஆங்காங்கே தோற்றுவிக்கின்றன.
கலாச்சாரம்
பொதுவாகவே ஸ்டார் விஜய் மீதும் அதன் நிகழ்ச்சிகள் மீதும் ஒரு விஷமத்தனமான குற்றச்சாட்டு உண்டு! அது உண்மையில்லை என்றும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் பாரத கலாச்சாரம் சார்ந்த விசயங்களில் அத்தொலைக்காட்சியின் கோபம், ஆற்றாமை பல சூழ்நிலைகளில் மிக மோசமாக, தரம் தாழ்ந்ததாக வெளிப்பட்டுள்ளன. அதுவும் இந்தப் பிராந்தியத்தின் வாழும் முறையான நடைமுறைகளை மட்டம் தட்டுவதில், நாத்திகர்கள் என்ற போர்வையில் உலவும் பகுத்தறிவுக் குருடர்கள் துணையோடு, இத்தொலைக்காட்சிக்கும், அதன் நிகழ்ச்சிகளுக்கும் இணை இவர்களே! அது இந்த நிகழ்ச்சியிலும் பிரதிபலித்ததில் வியப்பேதும் இல்லை! அதை விட ஆச்சரியம் இவ்வளவும் செய்துவிட்டு (அவரவர் வசதிக்காக) இது ஒரு சோதனை முயற்சி என்றதுதான்!
வியாபாரம்
முழுக்க முழுக்க வியாபார நோக்கிலான இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சமுதாய விழிப்புணர்வு, படிப்பினை போன்ற பிம்பத்தைத் தோற்றுவித்ததில் நமது நட்சத்திரத்திற்கு பெரும் பங்கு உண்டு. நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்ற பணியிலிருந்துகொண்டே, தானொரு மக்களின் பிரதிநிதி என்ற பிம்பத்துக்குள் நுழைந்து கொண்டது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஒருவேளை அதுவே கூட அவரை அரசியல் ஆர்வத்திற்குள் இட்டுச்செல்ல தூண்டுதலாயும் அமைந்திருக்கலாம். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அரசியலா? அதற்கும் எமக்கும் தூரம் என்று விலகிச் சென்றவரை, நிகழ்ச்சியின் இறுதியில், அதே அரசியலை பேசவும் செய்ததே! மனித மனங்களோடு விளையாட முயன்ற நிர்வாகத்தின் – தொலைக்காட்சியின் செயல்களின் எதிர்விளைவுகளைத் தாமதமாக புரிந்து கொண்டாலும் சுதாரித்துக்கொண்ட நிர்வாகம் – தொலைக்காட்சி மீண்டும் அவற்றை கையாளாதது சிறிது ஆறுதலே!
கத்திரிக்காய்
கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும். உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டே! என்னும் விதமாக, நட்சத்திரத்தின் ஒளி வெள்ளம் நிகழ்ச்சியின் வீச்சை அதிகரிக்கும், வியாபாரத்தைப் பெருக்கும் என்ற திட்டம் வெற்றியெனினும், நட்சத்திரத்தின் சில முரண்பாடுகள் மற்றும் சுயமரியாதை சார்ந்த விஷயங்கள் பெரும் பின்னடைவே! மேலும் வாங்கிய பணத்திற்கு, தன் புகழொளியே அதிகம் என்றுணர்ந்த நட்சத்திரம் புகுந்து விளையாடியது தொலைக்காட்சிக்கு புது பாடம்! மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் நிகழ்ச்சி முடியும்வரை இருதலைக்கொள்ளி எறும்பாய் நிர்வாகம் தவித்ததும் நிதர்சனம்.
நிகழ்ச்சியின் நோக்கம் வியாபாரம்; போட்டியாளர்களின் மறுவாழ்வு (உடனே நாங்கள் என்ன சீரழிந்து போய்விட்டோமா என்றெல்லாம் எண்ண வேண்டாம்) மறுவாழ்வை திருப்புமுனை என்று பொருள் கொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய போது, எழுந்த பிரச்சினைகளின் போதே, இதிலிருந்து என்ன எடுத்துக்கொள்ளலாம் என்று பதிவு செய்யலாம் என்றெண்ணினோம். ஆனால் அது இந்த நிகழ்ச்சியின் புகழ் வெளிச்சத்தில் குளிர் காய்வது போல் ஆகிவிடும் என்பதால் பொறுத்திருந்தோம்! ஆனால் அப்போது பதிவு செய்திருந்தால், இதை மனித வாழ்வோடும், இறப்போடும் ஒப்பிட்டு பதிந்திருப்போம்.
முரண்பாடு – Contradiction
ஆம்! மேலே குறிப்பிட்டுள்ள விமர்சனங்களையும் தாண்டி இந்த நிகழ்ச்சி ஒரு பாடமே! இதைச் செய்த தொலைக்காட்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே!
முரண்பாடு?
ஆம்! நமது கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாய் அமையக்காரணம்! நிகழ்ச்சியும், தொலைக்காட்சியின் இயக்கமும் அவற்றின் நோக்கமும் வேறாயினும், சேற்றில் மலர்ந்துள்ள தாமரையை (உடனே அரசியல் சாயம் பூசி விடாதீர்) காணும் பார்வை நம்குணம் என்பதே உண்மை!
VView: Bigg Boss Tamil – Season 1
வாழ்க்கை
மனித வாழ்வின் பிறப்பை ஒத்தது இந்நிகழ்ச்சியில் நுழைவது. இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டிருப்பது வாழ்வதற்கு ஒப்பாகும். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது மனித இறப்பை ஒத்தது. முதலில் இவ்வாறுதான் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தோம்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல, நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதமும், ஒருங்கிணைப்பும் நடப்பு அரசியல் நாடகங்களை ஞாபகப்படுத்தவே தெளிந்தோம்.
மனப்பாடம்
மனித மனங்களின் இயல்பு மற்றும் அதன் அதீத சக்தி ஆகியவற்றை போட்டியாளர்களில் பார்க்க நேர்ந்த போது மனப்பாடம் வியப்பை நல்கியது.
நம் வாழ்க்கையிலும் கூட அதன் மதிப்பையும், வாழும் முறையையும் புரிந்து கொள்ளாமல் பெரும்பாலானோர் உழல்வதை உணரலாம்.
எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும் அதற்கு சிறிதும் பொருத்தமில்லா குண நலன்கள், நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே என்ற உண்மையை அடித்துச் சொல்கிறது.
அதே நேரத்தில் புகழ் பெற்றிருந்தாலும் பெருந்தன்மை இல்லாமை, மரியாதை என்னும் போர்வையில் நடத்திய மிரட்டல் படலங்கள். அதை உணரும் அறிவிருந்தும் கண்டும் காணாமலும் காலம் கடத்திய நிர்வாகம் மற்றும் தொகுப்பாளர் முழுக்க முழுக்க நடப்பு அரசியல் சூழ்நிலைகளை புரிந்துகொள்ள பேருதவி புரிந்தன என்றால் அது மிகையாகாது.
சாமானிய போர்வையில் சென்று சாமானியர்களை வெட்கப்பட வைத்த பொய் நீலி முதல், சீர் தெரியாதென்று சீர் கெட்டு நடந்த “Hair” வரை, எதிலும் நேர்மை, நியாயம் என்று கேள்வி மேல் கேள்வி மட்டுமே கேட்டுவிட்டு சுயநலமாய் தன்னுடல் மட்டும் தேத்திகொண்ட வீரர் முதல், எங்கே எப்போது, யார் கிடைப்பார் என்று காத்திருந்து கவ்வுமாம் கொக்கு என்பதற்கிணங்க தேடித்தேடிச் சென்று ஆறுதல் போர்வையில் தேறுதல் கூறியவர் வரை, வந்த இடம் சேராமல் ஆரம்பித்திலேயே விலகிச் சென்ற அப்பாவி முதல், வெளியேற்றப்பட்டும் மெய் உணரா மூடர் வரை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் நம்மை நமக்கே பிரதிபலித்தனர்.
எளியவர் நகைப்பாக செயல் செய்யார்! வலியவர் நளினமாய் நன்மை செய்யார்! ஆனால் ஒரு எளியவர் வெற்றிக்காக செயற்கையாக சிரித்து சிரித்து எள்ளலுக்குள்ளானதும், வலியவர் அதிகாரம் செய்து அடக்கியாள முயன்றதும் ஒருங்கே நடைபெறக் கண்டோம்.
இவற்றிலெல்லாம் ஒரு சிறிய ஆறுதல், ஒரு போட்டியாளர் காட்டிய எளிமையான நேர்மை நம்மை மனதளவில் வீழ்த்தியதும் உண்மைதான்.
Bigg Boss வீட்டில் நமது அரசியல் போலத்தான். Bigg Boss, இனிமேல் நமக்கு “பெரியண்ணா”, சொல்வதைத் தான் போட்டியாளர்கள் கேட்க வேண்டும். ஆனால் உங்கள் கோரிக்கைகளுக்கு பெரும்பாலும் பதில் கிடைக்காது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை “பெரியண்ணா” தான் முடிவு செய்வார். கேள்வி என்பது அவருக்கு மட்டுமே! அதற்கு பதில் சொல்வதும், அவர் ஆணையை நிறைவேற்றுவது மட்டுமே போட்டியாளர்களின் கடமை மற்றும் உரிமை.
போட்டியாளர்களின் தேர்வு தொகுப்பாளரின் பரிந்துரையின் பேரில் நிகழ்ந்தது போன்ற பிம்பம் எழுந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதேபோல் போட்டியாளர்களும் “பெரியண்ணா” வைவிட தொகுப்பாளரையே பெரிதும் உயர்த்தித் துதிபாடினர்.
“பெரியண்ணா” வும் எதேச்சதிகாரமாக ஆரம்பத்தில் சில தகுதி மற்றும் தரம் குறைவான செயல்களை வியாபார நோக்கில் அரங்கேற்றியதும் நடந்தது. அதுவும் “பெரியண்ணா” மதிப்பு குறையக் காரணம்.
பல நிகழ்வுகள் அடிப்படை விசயங்களை சோதிப்பன போன்று தோன்றினாலும், போட்டியாளர்களின் தனித்திறமையின்மை, தகுதியின்மை “பெரியண்ணா” விற்கு பெரும் சங்கடத்தையே கொடுத்தன.
காட்சிகளின் தொகுப்பும், மக்கள் விருப்பத்தை பொறுத்தே, ஆதரவைப் பொறுத்தே அமைந்ததும் எளிதாக உணர முடிந்ததும் “பெரியண்ணா” விற்கு பெரும் பின்னடைவே!
தமிழில் மட்டுமே உரையாட வேண்டும் என்று விட்டு அவரவர் விருப்பம்போல் நடந்து கொண்டதும் “பெரியண்ணா” விற்கு பின்னடைவே!
பிற்பகுதியில் இடை சேர்ந்த ஒரு சிலர், சிறிது, மற்றவர்களை விட மேம்பட்டு இருந்ததையும் உணர முடிந்தது.
பேச்சு, நடை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருந்த “பெரியண்ணா” சிறிது உடை விசயத்திலும் அக்கறையும், கண்டிப்பும் காட்டியிருக்கலாம்
மனித காட்சி சாலை
இது சற்று கடுமையான வார்த்தை தான்! ஆனாலும் அதைச் சொல்லியே தீர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியதும் நிர்வாகமும் தொகுப்பாளரும் தான். “ஒற்றுக்கொண்டு கையொப்பமிட்டுத்தான் உள்ளே வந்தீர்கள் என்றதும், அவ்வாறு சொல்லும்படியாக நடந்து கொண்டதும், அவ்வாறு சொல்லப்பட்டும், சுய மரியாதை பேணாத நிகழ்வுகளும் சேர்ந்தே அவ்வீட்டை அவ்வாறு அழைக்க தூண்டியது.
Bigg Boss Tamil Season 1 – பெரியண்ணா பகுதி 1
இப்பதிவில் குறிப்பிட்டுள்ள நிறை-குறைகளை கருத்தில்கொண்டு இரண்டாம் பகுதி வரும் பட்சத்தில், அத்தொகுப்பும் இதைவிட பெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் தனது சுய பரிசோதனைகள் மூலமே இந்நிலையை எய்தியுள்ளது என்பதும் நிதர்சனமே! மக்களாகிய நாமும் இந்நிகழ்ச்சிகளின் மூலம் எது நன்மை தருமோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு அல்லவை தவிர்த்து மேம்படுவோம்!
பெரியண்ணா – நமக்கான மனப்பாடம்!!!