Diamond – வைரம்
சூழ்ந்த நீரும்
ஆழ்ந்த தீதும் – மனம்
தாழ்ந்த நிலை தரா!
துரோகம் செய்த
விரோதம் எய்த – ஒரு கணம்
குரோதம் என்றும் வெல்லா!
தோற்றுவிட்டாய் தோழா
வெற்று வார்த்தைகளாலல்ல
கூற்றின் பாழ்நிலையால்!
உண்மை உளமறியும்
நன்மை நாமறிவோம்
திண்மை தீதாகும்!
துரோகத்தின் வலி
உன்னைத் தீண்டாமல்
தாண்டி விடு!
விதி வலியது
சதி போற்றிய செயல்
கதி செய்தது!
மீண்டும் நினைவில் கொள்
தூண்டில் மீனல்ல நான்
வைரம்!
முயற்சி செய்
அப்படியாவது நீ
பயிற்சி பெறுவாய்!
சேவை சொற்களிளல்ல
தேவை காணா
நேர்மை நெஞ்சிலென்று!
பழித்தாய்! பவிசாய் வார்த்தை
அள்ளித் தெளித்தாய்
அழித்தாய் உன்னகம்!
புரிந்து கொள்வாய்
பரிந்தவன் பிழையல்ல
சரிந்தவன் நாம்தானென்று!
கெடும் காலம் என்றொன்று
சாடும் நிலை வேண்டாம்
நிமிர்ந்து நில்!
பொதுவாய்ப் போன
சாதுவைப் போக்க
மெதுவாய் விளைந்தாய்!
உண்மையென்றும் ஊமையாய்
நன்மை தீமை நோக்கா
ஆண்மையாய் அலங்கரிக்கும்
அதுவரை நடித்துக்கொள்
அதுவரை மட்டுமே
அதுவாய் பிடித்துக்கொள்
வைரத்தை வெட்டும்
வேறோர் பொருள்
வையத்தில் எங்குமே இல்லை
இவ்வைரத்தை வெட்டும்
வைரமாய் மாறிவிடு!
அதுவுமெனது வெற்றியே!
என்னைப்போல் ஒருவன்!