Story Highlights
- உடையது விளம்பேல்
ஆன்மீகம் அரசியல் திராவிடம்
இது முழுக்க முழுக்க சமுதாயத்தின் நிகழ்கால வாழ்க்கை, வாழ்க்கை முறையை பதிவு செய்யும் நோக்கத்துடனே பதிவு செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் யாருக்கும் ஒப்புதல் இருக்காது என்றே நம்புகிறோம்! எனவே தயவுசெய்து யாரும் இதைப்படித்து தங்கள் மனம், மானம், நேரம் செலவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்! பிறகு ஏன் இந்தப் பதிவு? நம் வலை தளத்தின் எந்த பொதுப்பதிவும் யாரையும் சென்றடையவில்லை என்பதுடன் அதற்கு நாம் வருத்தப்படுவதோடு நின்றுவிடாமல் எமது நிலையைத் தெளிவுபடுத்திக்கொண்டே தொடர்வோம்!
தாய்தமிழ் நாடே என்பதா?
பாரதத்தாய் என்பதா?
மானுடப் பிறப்பே என்பதா?
அடிப்படைகள் எல்லாம்
அவரவர் உழைப்பின்றி பெறுதல்
இழிவென்பதா? இல்லை
இரவலென்பதா?
உயிர் ஊற்றி உடம்பில்
உணர்வூற்றி உயிரில்
உயர்வாக வாழ்தல்
உயிர்வாழ உடம்பா? இல்லை
உரமாகும் மருந்தா?
அரு யாரென்று தெரியா – மூடர்
தரு தானென்று போற்றா – ஈனர்
அன்னையும் தந்தையும் புரியா – பதர்
மண்ணில் தேர்ந்தவழி புதர்
நோக்குங்கால் உணர்வீர்
போக்குந்தீமைசெய் மாந்தர் – தம்
ஆக்கம்தந்த தந்தையர் பால்
ஏக்கம்தான் அவர்தம் இழிநிலை
தனியொருவன் கையாண்ட மொழி
இனியொருவர்க்கு கையாள வழி
ஜகத்தினில் யாருக்கும் இல்லாமல் போக்கின்
அகத்தீமை மட்டுமின்றி
அகவூனமுமே யாகும்!
ஆன்மாவை அறியாமல் யாரும்
அரசியல் செய்தல் இனியும்
அகிலத்தில் சாத்தியமா?
மக்களின் தேவைகளை
மலிவாய்ப் பெற்றிட
மன் செய்தல் மாண்பா?
தாம் விரும்பம் எதையும்
தம்முழைப்பால் என்றும்
தடையின்றி பெறுதல் சிறப்பா?
ஊன் வளர்க்க வாழ்வா
வாழ்வதற்கு உணவா?
வீண் என்று கதைத்து
பாழ்செய்வது பகுத்தறிவா?
கற்றறிந்து கல்லார்க்கு
கைகொடுத்தல் கல்வி – அன்றேல்
குடிகெடுத்தல் தவறே!
மனம் படைத்து மாந்தர் – பிறர்
மனம் படித்து வேந்தர் – குடி
குணம் செதுக்கல் கல்வி – அன்றேல்
வனம் சமைத்த மூடர்
திராவிடம் என்பது அடையாளமா?
அதுவென்ன சிலரின்
ஆடை அலங்காரமா?
சில வருடங்கள் வயதுகொண்ட
கட்சிகளெல்லாம் – ஆயிர வருட
ஆலிங்கணத்தை அபகரிப்பதா?
கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன்தோன்றிய – எம்தமிழ்
கயமைசெய் கட்சிகளின் அடையாளமா?
ஆட்சி செய்ய சூழ்ச்சியை
மனசாட்சியின்றி தவழவிடும்
கட்சிகளெல்லாம் எம் தலைவர்களா?
குடி மறந்தாய்!
குலம் மறந்தாய்!
இனம் மறந்தாய்!
அக்கரை வனம் மகிழ்ந்தாய்
இக்கரை குணம் கவிழ்ந்தாய்
உன்னை தமிழனென்பதா
இந்தியனென்பதா
திராவிடனென்பதா
சக மனிதனென்பதா
உழைப்பின்றி இலவசமாய்
வரும் எதையும்
உதற மனமுண்டா?
கல்வி, மருத்துவத்தை
காசுக்காக என்றின்றி
கண்ணியமாய்க் கற்க உளமுண்டா?
மெரினாவுக்கும் மண்டபத்துக்கும்
நம் சுயவறிவை பொதிசுமத்தல்
சரிதானா?
அடிப்படையில் தோற்றோம்
இயற்கையிடம் தோற்றோம்
ஆனால் மீண்டும் – உண்மை
கற்பதிலும் தோற்றோம்
இருக்கும் விதிகளெல்லாம்
இயலாமையில் மூழ்க
இன்னமும் விதி செய்தே இறப்போம்
எனில் என்று வாழ்ந்தோம்
பகுத்தறிவைப் பேசியோர் – பொய்
பரப்புரையாய் மட்டுமே வாழ்ந்ததை
அவர்தம் கடைநிலையில் கண்டோம்
இனியும் தமிழையும்
தன்மானத்தையும் அவர்தம்
தகிடுதத்தங்களுக்கேவா தருவோம்?
அரசியல் என்பது
அரசின் இயல் என்ற அகம் இழந்து
அடுத்தவர் குடிகெடுத்தல் என்றால்
நம்கல்வித் திறனென்ன?
நாம் கற்றதின் பயனென்ன?
இம்மண்ணில் பிறந்த
ஒவ்வோர் உயிரும்
ஆன்மா – எனில்
அதைச் சுகப்படுத்துவதே
ஆன்மிகம்!
திராவிடம் என்பது ஒரு
இனத்தின் அடையாளம்
அது அரசியல் கட்சிகளின்
ஆத்மார்த்த சொத்தல்ல!
திராவிடம் என்பது தற்கால தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தனிச்சொத்தன்று! அது தென்னிந்திய பிராந்தியத்தில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற இனத்தின் அடையாளம்! அதை, திராவிடத்தின் ஆணி வேரறியாக் கட்சிகளின் பெயர்களில் தேடாதீர்கள்! அதே போல் எம் தமிழும் எந்தத் தனி மனிதரின் மறைவினால் குன்றி விடுவதுமில்லை! எவரும் தனித் தலைவருமல்ல! சூரியன் ஒருபோதும் உதிப்பதுமில்லை; உதிர்வதுமில்லை! மனிதர் யாரும் சூரியனுக்கு இணையுமில்லை!