Story Highlights
- குறுந்தொடர்கதை
இனியும், போர், பழங்கால கதைகளில் கேட்டது போல் ரதங்களிலும், தேர்களிலுமோ அல்லது இராணுவ வெடிகளிலோ நிகழப்போவதில்லை. நம் எதிரில் இருப்பவரின் முகம் நோகாச் சொற்களில் காட்டும் கவனம், அவர் மனம் நோகும் செயலும் போரே!; கூத்தாடிகளுக்கு! கூடிக்களிக்கையில் தோள் சேர்த்து, பின் சென்று குழிப்பரித்தல் போராம்; அரசியல் கூத்தாடிகளுக்கு! வளம் சேர்க்கும் வகை ஒன்று கூடல் பலமெனில் அதைப்பற்றாச் செயல் போராம்; சொந்தங்களுக்கு!
போர்! போர்! போர்! – பகுதி 3
மலரவனின் வருகைக்காக எப்போதும் மூவரும் ஆவலாகக் காத்திருந்தாலும் இன்று சிறிது கூடுதல் எதிர்பார்ப்புதான். கயல்விழியும், இனியவனின் கேள்வியே முதலாய் இருக்கும் என்றெண்ணிய போது, மலர்க்கொடியின் கேள்வி சற்று அதிர்ச்சி தான்.
மகளின் கேள்விகளில் பெரும்பாலும் தந்தையர் ஸ்தம்பிப்பதே வழக்கு. காலையில் பள்ளிக்கு விரைகையில் வழியில் குறுக்கிட்ட வாகன ஓட்டியை வசைபாடியதைச் சாடியே கேள்வி! தவறு தான்! மன்னித்து விடு! என்பதைத் தவிர மகளுக்கு என்ன ஆறுதல் செய்ய முடியும்? ஆனால் மகளின் முகத்திலிருந்த தவிப்புகென்ன செய்ய முடியும்! கேட்க வேண்டிய இடத்தில் கேட்கப்படாத மன்னிப்பு வெறும் சாக்கே!
அதனால், இனியவனின் கேள்வியின் போது, காலையிலிருந்த கோபம் காணாமல் போனதே மலரவனுக்கு ஆச்சரியம்! கயல்விழிக்கோ அன்பு மகளின் நேர்மை கண்டு பெருமகிழ்ச்சி! பெண் சேர்த்து வைக்கும் சொத்தே; பொதுவொழுக்கம்!
மலரவன், போர் என்பது ஒரு நாட்டிற்க்கும் இன்னொரு நாட்டிற்க்கும் அல்லது பல நாடுகள் சேர்ந்து வேறு பல நாடுகளுடன் சண்டையிடுவது என்ற போது இனியவன் ஒரு நாட்டின் மீது பல நாடுகள் சேர்ந்து சண்டையிட்டால்? என்று கேட்க, அதுவும் போர் தான் என்பதைச் சொல்லிவிட்டாலும், அவன் மனசாட்சி, எளியோன் ஒருவன் மீது வலியோர் பலர் தாக்குதல், வன்முறை மற்றும் பழிச்செயல் என்பதும் வலியோன் ஒருவன் மீது எளியோர் பலர் தாக்குதல் ஒரு விதத்தில் புரட்சி / பொய்ப்புரட்சி / அத்துமீறல் எனவும் ஞாபகப்படுத்தாமல் இல்லை.
இனியவன் தன் கேள்விக்குப் பதில் கிடைத்த மகிழ்ச்சியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கினான். ஆனால் மலரவனுக்கோ ஆச்சரியம்! குழந்தைகள் கேட்கும் கேள்விகள், சில நேரங்களில், நமக்கு பெரும் விழிப்புணர்வையும் சுய பரிசோதனையையும் செய்யும்படி செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு, எளிய பதிலே போதுமானதாய் உள்ளது.
கயல்விழிக்கும் அந்த பதிலில் சிறிது திருப்திதான் எனினும், மலர்க்கொடியின் கேள்வி மலரவனை நிலைகுலைத்து பதிலைச் சுருக்கியதில் சிறிது ஏமாற்றமே! ஆனால் பெண்கள் பல நேரங்களில் சூழ்நிலைகளின் போக்கைக் கொண்டே, மூலமறிவதில் மானுடப்பிறப்பின் முன்னோடிகள்! இல்லாவிடில், மண்ணில் தெய்வமாய் எப்படி அவர்கள் உலா வருவது?
அடுத்த தெய்வமும், புரியாவிடினும் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்ததை மலரவன் உணர்ந்தபோது அவன் மனம் சொன்ன சாட்சி: பெண்களால் இவ்வுலகம் சொர்க்கமாய்த் தொடரும்!