ஊடக முகங்கள்
ஊடக முகங்கள் என்பதை விட ஊடகங்களின் போர்வையில் போலி முகங்கள் என்பதே இப்பதிவிற்கு பொருத்தமாக இருக்கும்!
வணிகம், வலைத்தளம் மூலம் பெருக ஆரம்பித்ததன் விளைவு, அனைத்து அச்சக, தொலைக்காட்சி மற்றும் வலைத்தள நிறுவனங்களுக்கு மக்களை அடைய, அதன் மூலம் தத்தமது வணிகம் பெருக மக்களை தொடர்ந்து ஈர்த்து, அவர்களை தங்களது செய்திகளுக்கு அடிமையாக வைக்க வேண்டி, சிறு சிறு புள்ளிகளைக் கூட பெரிதாய் ஊதி நம்மை பதட்டத்திலேயே வைக்கின்றனர்.
சமீபத்திய எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் கீழ்க்காண்போம் :
- ஏழு பேர் விடுதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
- ….க்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தானதா?
ஒரு நடிகரிடம் ஒரு பெண் நிருபர் தொடர்ந்து சிறுபிள்ளைத்தனமாக
- இலவசங்களை எரிப்பது போல் நடிப்பது எப்படி?
என்று துருவி துருவி கேள்வி கேட்டதின் அப்பட்டமான நோக்கம் குற்றம் சாட்டுவதாயே இருந்தது
நெறியாளர் என்ற போர்வையில் தங்கள் நிகழ்ச்சியின் TRP க்காக மட்டுமே வாதம் கோர்த்த தொலைக்காட்சி நிருபர்
நமது அன்றாட நிகழ்வுகளைக் கூட அவர்களுக்கு தேவையெனில் விற்கத் தயங்காத வியாபாரிகள் இவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் உண்மை நிலை காண்போம்.
ஏழு பேர் கேள்விக்கு வருவோம்! அந்த ஏழு பேர் என்ன பெரிய தியாகிகளா? அல்லது நாட்டுப்பற்று மிக்கவர்களா? அல்லது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமா? நாட்டின் முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களின் தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதென்பது அரசின் முடிவு. ஊடகங்களும் அதன் ஊழியர்களும் வேண்டுமானால் எப்போதும் தலையில் சுமந்து கொண்டே திரியலாம். ஆனால் மற்ற எல்லோரும் தூக்கிக் கொண்டு திரிய வேண்டுமென்பதோ, அப்படியில்லையென்றால் தமிழர்களே இல்லை என்பதோ முட்டாள்தனத்தின் உச்சம்.
இலவசங்களை எரித்தல் தேச துரோகம் என்பது போன்றும் அதை வன்முறைத் தூண்டுதல் என்றும் குற்றம் சுமத்தும் நோக்கிலேயே கேள்வி தொடுத்தல் ஒரு விதத்தில் போலித்தனமே. படைப்புரிமைக்குள் தலையிடுவதில் அதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதில் ஊடகங்கள் ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பற்றியெரிந்த நெருப்பில் நெய்யை விட்டு தூண்டிக் கொண்டேயிருந்த செயல், நண்டைக் குளம் மாற்ற உதவிய கொக்கை ஒத்திருந்தது.
ஊடகங்களில் தகுதியில்லாதவர்கள் நுழைந்ததால் உண்மை ஒளிந்தே செல்கிறது!
வணிக எண்ணம் கோலோச்சி வருகிறது!