Story Highlights
- வரலாற்றுப் பதிவு
சோழப்பேரரசு
பொறுப்பு துறப்பு: இது ஒரு வரலாற்றுக் குறும், நெடுந்தொடர்த் தேடல் தொடர் பதிவு! இக்கருத்தில், இத்தகவல்களில் உடன்பாடில்லாதவர்கள், மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் தகுந்த சான்றுகளைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கருத்துகளும் பதிவு செய்யப்படும்! பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
மன்னறிதல் உயிர் வளர்க்கும்! மண்ணறிதல் ஊன் வளர்க்கும்! வாழ்ந்த கோடி சாதித்ததென்னவென்று காணுங்கால், வாழும் நாள் சொர்க்கமே!
தேடல் 4
கரிகாற்சோழன்
கரிகாற் பெருவளத்தான், இலங்கையை வென்றாண்டவன் என்பதை சங்க நூற்களோ, இமயம் சென்று, வென்று மீண்டான் என்பதை தொகைநூற் பாக்களோ குறிப்பிடாவிடினும், முறையே கலிங்கத்துப் பரணியும், சேர இளவல் – இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும் நமக்கு தெரிவிக்கின்றன.
சந்திர குப்தன், பிந்துசாரன், அசோகர் இம்மூவரின் காலம் தோராயமாக கி.மு. 327 – கி.மு. 232க்கு உட்பட்டதாக நம்பப்படுவதால், அக்காலத்தில் தமிழ் வேந்தர் யாரும் வடநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.
புஷ்யமித்திர சுங்காவின் காலம் கி.மு. 184 முதல் – கி.மு. 145 வரையாதலால், இக்காலத்திலும் தமிழ் வேந்தர் வடநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.
கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், ஆந்திரர் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலமாதலால், இக்காலத்திலும் தமிழ் வேந்தர் எவரும் வடநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. கி.பி. 163 இல் கௌதமீபுத்திர சதகர்ணியின் மகனான புலுமாயிக்குப் பின் வந்த அரசர்கள் வலுக்குன்றியவர்களென்று கருதப்படுகின்றது.
எனில், கரிகாற் சோழன், வடக்கு நோக்கிப் படையெடுத்த காலம், 1. கி.மு. 232 – கி.மு.184 வரை, 2. கி.மு.148-கி.மு.27 வரை மற்றும் 3. கி.பி.163-கி.பி.300 வரை. செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம், இம்மூன்றாம் காலமாகும். இலங்கையில் கயவாகுவின் தோராயமான காலம் கி.பி.166-193 வரையாகும். செங்குட்டுவனின் காலம் மற்றும் சிலப்பதிகாரத்தின் காலம் தோராயமாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் ஒவ்வும் உண்மையாகும். எனவே, கரிகாற் சோழனின் காலம், முதல் இரண்டு காலத்திற்குள் இருந்திட வேண்டுமென்பதே நிலைப்பாடு.
மாறாக, இலங்கையின் வரலாற்றினூடே காண விழைகையில், தமிழ் அரசர்கள் இலங்கையை ஆண்ட காலங்கள்: 1. கி.மு.170 முதல் கி.மு.100 வரை, 2. கி.மு.44 முதல் கி.மு.17 வரை. அதன் பின்னர் படையெடுத்த காலங்கள்: கி.பி. 660, கி.பி.1065, கி,பி.1200-1266 ஆகும். எனவே, கரிகாற் சோழன் முதலிரண்டு காலத்திலெதிலோ தான், இலங்கையின் மீது படையெடுத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, முதல் காலமென்பது, ஏழாரன் என்னும் தமிழரசன் ஆண்ட காலமாகும். எனவே, கி.மு.44 முதல் கி.மு.17 வரையிலான காலகட்டமே, கரிகாற் சோழன் இலங்கையின் மீது படையெடுத்த காலமெனக்கொள்வதும், அது, மேற்கூறியுள்ள இரண்டாம் காலத்துடன், கி.மு.148 முதல் கி.மு.27 வரை, ஏறத்தாழ ஒத்துப் போவதும் கண்கூடு.
மேலும், பொருநர் ஆற்றுப்படை, பட்டினப் பாலையின் வழி, தமிழர் , உரோமரோடு கரிகாலச் சோழனின் காலத்து முன்பே வணிகஞ்செய்து வந்ததும், பாண்டிய மன்னன் கி.மு.20ல் உரோமப் பேரரசருக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பியதும் வரலாறு. (அகஸ்டஸ் -அரசாட்சி காலம்:கி.மு.39 முதல் கி.மு.14 வரை). இவ்வர்த்தகத் தொடர்பு, கரிகாற் சோழன் காலத்திலும் தொடர்ந்ததும், செழித்து வளர்ந்ததும் வரலாறு.
- இமயப்படையெடுப்பு
- சங்க காலக் கரிகாலர்
- சோழர் வரையறை
பற்றி விரிவாகக் காண்போம், அடுத்த பதிவில்..!
நன்றி: “சோழர் வரலாறு” – நூலாசிரியர்: திரு. டாக்டர்.மா.இராசமாணிக்கனார்,
அகிலமே, அனைத்துயிர்க்கும் சேமித்து வைத்த புதையலென்பதும், அதைத் தொலைத்தொழித்தலும், புதைத்தழித்தலும் சிறார் குணம் என்பதை தேவனும், தேவியும், வாஞ்சையோடு கண்டு மகிழ்ந்திருந்தனர்
- உண்மையறிதலும், உன்னையறிதலும்
உலகமறிந்திட, உயிர்கள் மகிழ்ந்திட
நன்மை பகிர்தலும், நன்றே பகிர்தலும்
துகளதின் வாய்மையென்பதும்
அறியுங்கால் அறிவாய்
அருவை அன்றேல் அழிவை!
சோழர் வரலாறு – பழைய பதிவுகள்
இராஜராஜ சோழனின் வாரிசுகள், உண்மையில் யார் இராஜராஜ சோழனின் வாரிசுகள்?
சோழப்பேரரசு