Story Highlights
- கதை கேளு! கதை கேளு!
இன்று முழுவதும் மலரவனுக்கு வேலையில் நாட்டம் செல்வது கடினம் தான். தன் செல்வ மகன் இனியவன் கேட்ட கேள்வியும், புதல்வி மலர்கொடியின் புருவமுயர்த்தலும், இன்று இரவு, பெரிய கச்சேரி உள்ளது என்பது மட்டும் புலப்பட்டது. ஏறத்தாழ, கயல்விழியும், அதே மனநிலையில் தான் சமயலறையில் உழன்று கொண்டிருந்தாள்.
கம்யூனிசம் என்றால் என்ன ?
நாம் படிக்கும் காலத்தில், அமெரிக்கா, நமக்கு எதிரி நாடு. ஏனென்றால், அவர்கள் பாகிஸ்தானுக்கு உதவி செய்பவர்கள். நமக்கு, சீனாவும் எதிரி நாடுதான். நம் நாட்டின், பல பகுதிகளை ஆக்கிரமிக்க போர்தொடுத்த நாடு. மேலும், அவர்கள் பாகிஸ்தானுக்கும், நிறைய உதவிகள் செய்பவர்கள். நமது இந்திய தேசத்தின் நெருங்கிய நட்பு நாடு, U .S .S .R (Union of Soviet Socialist Republics). அவர்கள் நாடு கம்யூனிச நாடு! அவ்வளவு தான் நமக்கு தெரிந்த கம்யூனிசம்.
மேலும், வரலாற்றுப் பாடங்களில், இந்திய வரலாற்றைத் தவிர பிற நாடுகளின் வரலாறு பெரும்பாலும் மனதில் பதியவில்லை என்பதே உண்மை. ஸ்டாலின், காரல் மார்க்ஸ் போன்றோர் பெயர், கம்யூனிசம், என்றால் நினைவிலாடுகிறது.
மேலும், அமெரிக்காவாலோ, பாகிஸ்தானாலோ அல்லது சீனாவினாலோ, நம் இந்திய தேசத்திற்கு, ஏதேனும், அச்சுறுத்தல் என்றால், நம்மைக் காப்பாற்றும், காப்பாற்றப்போகும் ஒரே பாதுகாவலர், சோவியத் குடியரசு மட்டுமே என்றும் நாங்கள் கற்றவை, வாழ்ந்த காலங்கள் மனதில் பதியம் போட்டன.
இது அரசியல் சதியா? உருவாக்கப்பட்ட மாயமா? என்பதை உணர, பெரும் தரவுகள் மற்றும் காலம் தேவைப்படும். ஏனெனில், சமீப காலங்களில், எதையும் உண்மையென்று நம்பவே அச்சம் எழுகிறது. அதிலும் குறிப்பாக, செய்தியை, நம்புவதா? வேண்டாமா? அல்லது சொல்பவரை, நம்புவதா? வேண்டாமா?, அனைவருக்கும் சம உரிமை, சொல்வதில், செய்வதில்! யார், எப்படி, சரியான தகவல்களை தருகிறார்கள் என்பதும், அதன் உண்மைத்தன்மை அறிய, இன்னொரு மாற்றுக்கருத்து தளத்தைக் கொண்டே, சீர்தூக்கிப் பார்க்கும் புது யுக்தி, இவற்றுக்கு நடுவே, உண்மைத்தன்மையும் தெரியாமல், நேர்மையும் இல்லாமல், வெறுமனே புகழொளிக்காய் புற்றீசல் போல் கிளம்பிவிட்ட புதர்கள்!.
நம்மை அறிவிக்க, அறிவில் ஈர்க்க, அறிவைச் சேர்க்க பயன்பட வேண்டிய கல்வி, தத்தம் கொள்கை விளக்கச் சாதனமாக பயன்படுத்தப்பட்ட கயமையே, திருவள்ளுவரும், பாரதியாரும் போதிக்கப்பட்ட களத்தில், தன்னைத்தானே உயர்ந்தோராய்க் காட்டிக்கொண்ட சிலரைப் பற்றிய பாடங்கள். பள்ளிக்கல்வி காலத்தில் பெரிதாக கண்டுகொள்ளாத அப்பாடங்களை, பட்டக்கல்வியில் கிழித்தெறிந்த தைரியத்தை வாழ்க்கையே கற்றுக்கொடுத்தது.
எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்து நிற்கும் நமது சிந்தனை, நமது செல்வ மகனின் கேள்விக்கு எப்படி பதிலாகும்? நிச்சயம், பதில் தராது தான். எனினும், இதைப் புரிந்து கொள்ளாவிடில், சொல்லும் பதிலில் உயிர்-உண்மை இருக்காதே. இந்த நாட்டின் அரசியலும், அதை ஆளுமை செய்யத் துடித்த அவலட்சணங்களும் புரியாமல், நமது மண்ணின் வரலாற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது.
இல்லையென்றால், தமிழைக் காட்டு மொழி, ஆங்கிலேயன் தான் நாட்டை ஆள வேண்டுமென்று விரும்பிய, விரும்பி சோம்பு தூக்கிய ஒரு சிறியோனைப் போற்றுவதை பெருமையாகக் கொள்ளும் கொடியவர்களும், ‘பகுத்தறிவு’ என்ற, அதே காட்டுவாசி மொழியின், சொல்லைப் பிழைப்பிற்காக பிடித்துக்கொண்டிருக்கும் பொய்ப் போராளிகளும், நம் நாட்டின் புனிதத்தை, புண்ணியத்தைப் புதைக்க முயன்ற கதை தெரியாமலே போய்விடும்.
சோவியத் குடியரசில், நாடு முழுவதும் அரசின் உடமை. தனி மனிதர் எவருக்கும், எதுவும் சொந்தமில்லை. அவரவர் அறிவுக்கும், திறமைக்கும் பணி செய்வதும், வாழ்வதும் அடிப்படைக்கடமை. நாமறிந்த கம்யூனிசம் அவ்வளவு தான். மேலும், பல கேள்விகள் கம்யூனிசம் பற்றி உண்டு. ஆனால், அவற்றைக் கேட்டுத்தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல் போனது, இயற்கையிலேயே.
ஒரு ரூபாய்க்கு மாணவர் அமைப்பில் பிரதிநிதி என்று படித்துக் கொண்டிருந்த மாணவரிடம், ஞாயிறன்று, வீட்டிற்கே வந்து வாங்கிச் சென்றதன் எதிர்வினையோ அல்லது அவர்கள் மீது ஏற்பட்ட மதிப்பிழப்போ! குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த ஒரு நபர் MLA ஆக இருந்தே போதே, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த எனது தாத்தா, வேலை செய்து வந்த மில்லில் ஓய்வு அடைந்த சில மாதங்களில், அந்த மில்லே இழுத்து மூடும் நிலைக்கு சென்றதிலும், அதன் பிறகு நிலைமை மேம்பட முடியாமல் போனதில், கட்சி சார் நிர்வாகிகளின், தரம் தாழ்ந்த செயல்கள் இருந்ததாகப் பேசப்பட்டதனாலோ, சமீபத்திய ஆண்டுகளில் கூட, முதலாளிகளை மட்டுமல்ல, தொழிலாளிகளையும் வஞ்சிக்கும் கேவலமான செயல்களைக் காணும் வாய்ப்பு பெற்றதனாலோ! கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், அந்த சித்தாந்தத்தின் மீதும் துளியும் மதிப்பில்லை.
எனக்கு பிடிக்கவில்லையென்பதற்காக, நாம் அவனிடம், இந்த சித்தாந்தத்தை எப்படி அவனுக்குப் புரியும்படியும் விளக்குவது. எனவே, சித்தாந்தத்தையும், அதைக் கடைப்பிடிக்கும் நபர்களின் தரமும் சொல்லிவிட வேண்டியதுதான். அவர்களின் நேர்மை-உண்மை பற்றிய முடிவு அவன் கையில்.
சரி! நமக்கு, எது உண்மை?, எது பொய்?, எது நன்மை தரும்?, எது தீமை தரும்? என்று, எப்படி தெரிந்தது?. குழந்தைக்குப் பெற்றோரே, நன்மை செய்வோர் என்னும் போது, அவர்கள் பார்வையில், அவர்களின் செயல்கள், குழந்தைகளின் நலன் சார்ந்தே இருக்கும். மேற்கத்திய சமுதாயத்திற்கும், நமது இந்திய சமுதாயத்திற்கும் உள்ள வித்தியாசம், பெற்றோர் – குழந்தைகள் நடந்து கொள்ளும் விதமேயாகும்.
இந்தியக் கலாச்சாரமே, உலகின் தலை சிறந்த நாகரீகம் மற்றும் மனிதர் வாழ்க்கைமுறை! இதில் தவறும், குறையும் நேர்ந்த காலம் மற்றும் அதன் விகிதாச்சாரமே, இந்தியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சியாகும். உண்மை, நேர்மை போற்றிய சமுதாயம், பொய் மற்றும் அசத்தியமான செயல்கள், தந்த சிற்றின்பத்தில் மூழ்கி, தம்மைச் சார்ந்த குடிகளையும், தாழ்த்தி விட்டனர்.
தகுதியற்ற, அநீதி செய்யும் ஒரு குடும்பத்தலைவனால், ஒரு கூட்டுக்குடும்பம் உடைய, சீட்டுக்கட்டுகளாய், பல குடும்பங்கள் உடைய, பின்னாளில் அதுவே சிறந்ததாயும் ஆகி விட்டது. உடைந்த கண்ணாடித்துண்டுகளை ஓட்ட முடியாதென்றாலும், நம் தலைமுறையின் முன் நிற்கும் சவாலே, அது தான். நேர்மை, சத்தியத்தின் பலனை முழுதாய் நமது குழந்தைகளுக்குத் தந்து, நமது குலத்தின் தெய்வங்களாய் மாறுவோம். மனிதம் தெய்வமாவது இங்கே தான். உங்கள் இலக்குகளைப் பரப்பாதீர்கள். குவியுங்கள்; குவித்து ஒவ்வொன்றாய் செப்பனிடுங்கள். ஒவ்வொரு தனி மனிதரும் தத்தம் இலக்குகளை நேர்மை, உண்மை மற்றும் சத்தியத்தைக் கொண்டு செதுக்குகையில், நமது சமுதாயமும், நமது இந்தியக் கலாச்சாரத்தின் வழி மீளும்.
எனவே, குழந்தைகள் மட்டுமல்ல நாமும் கூட, எல்லா விசயங்களையும், நேரடியாக கண்டுணரும் வாய்ப்பு கிட்டாவிடினும், நமக்கு நம்பிக்கையானவர்கள், நாம் நம்பும் நண்பர்கள், பெரியோர், ஆசிரியர் மற்றும் இன்ன பிறர் மூலம் தெரிய வரும் விசயங்களையும், கருத்துக்களையும் முதலில் ஏற்று, நமது அனுபவத்தில் ஒப்புக்கொண்டு தொடர்வதும், ஒப்புக்கொள்ளாமல் தொடர்வதும், நடந்து வருகிறது. எனக்கு தெரிந்த கம்யூனிசத்திற்கு, இந்தியாவில் என்ன வேலை? என்று தான், இன்று வரை எண்ணிக்கொண்டுள்ளேன்.
வங்காளத்தில் ஒரு நேர்மையான முதல்வர், பல வருடங்கள் ஆட்சி செய்தார் என்பதும், அவர் ஒரு கம்யூனிச வாதி என்பதிலும் எனக்கு, என்ன பெருமை மற்றும் நன்மை? என்பதும் இமாலயக் கேள்வி! கேரளத்தில் காங்கிரசும், கம்யூனிசமும் மாறி, மாறி ஆட்சிக்கு வருவதும், என்ன பெரிய சாதனை? என்பதும், நூறு சதவீதம் கல்வி கற்றதாக அறியப்படுகிற மாநிலத்தில், காட்டுமிராண்டிகள் போல், கட்சியின் பெயரில் நடக்கும் கொலைகள் கேலிக்குரியதே!
அன்று முதல் இன்று வரை, எனக்கு தெரிந்த, தங்களைத்தாங்களே கம்யூனிசவாதிகள் என்று அவர்களே, சொல்லிக்கொள்கிற, கம்யூனிசம் என்பது, தான் வாழ, யாரோடும் கூடி வாழலாம்; கெடுத்து வாழலாம்; தூற்றி-போற்றி வாழலாம்! இல்லையென்றால், வங்காளத்தில் எதிர்த்துப் பேசி விட்டு, தமிழகத்தில் கூடிப் பேசிவிட்டு, கேரளத்தில் மறுபடியும் எதிரெதிர் பிரச்சாரம் இவர்களால் செய்ய முடியுமா? இவர்கள் பிழைப்பே கொள்கை விற்றலும், கொள்கை பேசலும் என்பதை எப்படிச் சொல்வது?
இனியவன் புண்ணியத்தில், கசப்பான சில உண்மைகளை திரும்பிப் பார்க்க நேர்ந்தது. மாலையில் பள்ளியிலிருந்து திரும்பியிருந்த இனியவனும், மலர்க்கொடியும் தத்தம் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு, “சிங் சாங்”கில் மூழ்கி விட்டிருந்தனர். மலரவன் இரவு பணி முடித்து வந்து, உணவுண்டு விட்டு, சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடி விட்டு படுத்த போது, படுக்க மனமில்லாமல்
இனியவன் கேட்ட கேள்வி, கம்யூனிசம் ன்னா என்னங்கப்பா? (ஆனால் எனக்கோ,
Communism ன்னா என்னாங்க Bigg Boss ?,
என்றே மனதில் தோன்றியது?)
மலர்க்கொடியும், கயல்விழியும் பெரிதாக அதில், ஆர்வம் காட்டவில்லை. மலரவனோ, “கம்யூனிசம் என்றால் பொதுவுடைமை என்று பொருள்” என்க, “அப்படீன்னா?” என்று இனியவன் விடாது கேட்க, “அப்படீன்னா, எல்லாமே அரசாங்கத்திற்கு சொந்தம், தங்கற வீடு மற்ற எல்லாமே!” என்று மலரவன் கூற, “அப்படீன்னா, நம்மளுக்கு ஆகாதுல்ல!” என்று மழலை மொழி கொஞ்ச, “ஆமாண்டா கண்ணு!” என்று மலரவனும் கட்டியணைக்க, அந்த இரவில் – கனவில் தேடல் தொடருமோ? என்னமோ?, இருவருக்கும்!