Story Highlights
- வரலாற்றுப் பதிவு
சோழப்பேரரசு
பொறுப்பு துறப்பு: இது ஒரு வரலாற்றுக் குறும், நெடுந்தொடர்த் தேடல் தொடர் பதிவு! இக்கருத்தில், இத்தகவல்களில் உடன்பாடில்லாதவர்கள், மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் தகுந்த சான்றுகளைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கருத்துகளும் பதிவு செய்யப்படும்! பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
வாழும் கலையறியா மாந்தர், வேந்தரெனில், குடி நிலை கடையாம்! ஆளும் வழியறியா வேந்தர், மாந்தரில், குடி அழிக்கும் படையாம்!
தேடல் 5
இமயம்
கரிகாலன் ஆட்சி செய்த கி.மு. 60 – கி.மு. 1௦ வரையான கால கட்டத்தில், வடக்கில் மகத நாட்டை ‘கண்வ’ மரபின் வாசுதேவ கண்வன் கி.மு.73ல் ஆண்டார். வச்சிர நாடும், அவந்தி நாடும் மகத தேசத்திலிருந்து தம்மாட்சி பெற்று வாழ்ந்ததும், கரிகாலன் இமயஞ் சென்று, வென்று, மீண்ட போது, மகத மன்னன் பட்டிமண்டபமும், வச்சிர வேந்தன் கொற்றப்பந்தரும், அவந்தி அரசன் தோரண வாயிலும், தந்து மரியாதை செய்ததை, சிலப்பதிகாரம் செப்புவதைச் செவிகொள்வோம்.
சங்க கால கரிகாலர்
கரிகாலர் இருவரெனில் நம்புவீரா? ஆராய்ச்சிகள் சொல்லுவது அதைத்தான். பரணர் பாடிய சோழன் ஒருவரெனில், அவரும் இரண்டாமவரெனில், முதலாமவர் யார்? கழாத்தலையார் மற்றும் வெண்ணிக்குயத்தியார் பாடியவர் – முதற் கரிகாலனைப் பற்றி எனக்கொள்வோம். பரணர் காலத்தவரான கபிலர், கழாத்தலையார் தம் காலத்து முன்னவரெனில், புரியும் விசயமிதுவே! கரிகாலனைப் போற்றி, முடத்தாமக் கண்ணியார் இயற்றிய “பொருநர் ஆற்றுப்படை” அறிவிக்கும் சேதியாதெனில், அது இரண்டாம் கரிகாலன் பற்றியது. தொகை நூல் வழியே, சோழர் உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் ஆண்டனரென்பது கண்கூடு. அழுந்தூரை ஆண்ட சென்னி மரபினன், முதற்கரிகாலன், இமயம் சென்ற கரிகாலன், இரண்டாம் கரிகாலன் எனக் கொள்தல் சரியே! எனில், முதற்கரிகாலன் ஆண்ட காலம் கி.மு.120 – கி.மு.90 எனவும், இரண்டாம் கரிகாலன் காலம் கி.மு.60-10 எனவும் கொள்வது சரியன்றோ?
சோழர்கள்
தொகை நூல்களிலும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற நூற்கள் பகிரும் சோழர் பலர். அவற்றுள் மூத்த முதல்வரைக் காண்போம்.
- சிபி
- முசுகுந்தன்
- காந்தன்
- தூங்கெயி எறிந்த தொடித்தோள் செம்பியன்
- மநுநீதிச் சோழன் (கி.மு.200)
சங்க காலச் சோழர்
நாம் சேர்த்த சேதிகொண்டு அறிவது, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியின் காலம் கி.மு 298 – கி.மு.272 (மோரிய – பிந்துசாரனை எதிர்த்தபடியால் பிந்துசாரன் காலமுமிதுவே). முதற்கரிகாலன் காலம் கி.மு.120 – கி.மு.90. இரண்டாம் கரிகாலன் காலம் கி.மு.60 – கி.மு.10. எனில், சோழர் கால வரையறையைக் காண்போம்
கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர் ( Pre 300 B.C)
- சிபி
- முசுகுந்தன்
- காந்தன்
- தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
கி.மு. 3ம் நூற்றாண்டுச் சோழர் (300 B.C)
- செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
கி.மு. 2ம் நூற்றாண்டுச் சோழர் (200 B.C)
- மநுநீதிச் சோழன்
- முதற்கரிகாலன்
கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர் (100 B.C)
- இரண்டாம் கரிகாலன்
கி.பி. 1 முதல் – கி.பி. 150 வரை ஆண்ட சோழர்
- நலங்கிள்ளி
- நெடுங்கிள்ளி
- மாவளத்தான்
- கிள்ளி வளவன்
- பெருநற்கிள்ளி
- கோப்பெருஞ்சோழன்
- இதர சோழர்
கி.பி. 150 முதல் – கி.பி. 300 வரை ஆண்ட சோழர்
- நெடுமுடிக்கிள்ளி
- இளங்கிள்ளி
சிபி
எல்லாச் சங்கப்புலவராலும், பிற்காலத்தைய புலவர்களாலும், குறிக்கப்படும் சிறப்பு கொண்ட சிபிச் சக்ரவர்த்தியின் சேதி, இராமாயண, பாரத காவியங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. புறநானூறும், சிலம்பும், கலிங்கத்துப்பாவும், மூவருலாவும், பெரிய புராணமும் போற்றும் திறன் கொண்ட கோவே, சிபி.
புறநானூறு
- புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
சிலப்பதிகாரம்
- புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்http://tiruppur.tn.nic.in/
குறைவில் இடம்பரிந்த கொற்றவன்
முசுகுந்தன்
கருவூரிலிருந்து சோழ நாட்டை ஆண்டு (கந்த – விஷ்ணு புராணங்களில் குறிப்பிடப்பட்ட, குரங்கு முகம் – மனித உடல் வடிவிலான இறை வரம்) இந்திரன் என்ற பேரரசனுக்கு நெருக்கமாய் நட்பு பாராட்டியவர். இந்திரனிடம் பெற்ற ஏழு சிவலிங்கங்களை, “சப்தவிடங்கத் தலங்களான” திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளில், எழுந்தருளச் செய்த, சிவ பக்தன். மணிமேகலை கூறும் “நாளங்காடிப் பூதம்”, இவ்வரசனுக்கு, இந்திரப் பேரரசன், மெய்க்காப்பாளனாய்ப் பரிசளித்த பூதம், பூம்புகார் நகரில், மருவூர்ப்பக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபதிகட்கும் இடையில், இருந்த ‘நாள் அங்காடி’ யினின்று, காவல் காத்ததாய் அறியப்படுகிறது. முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பா, கந்த புராணம், ஒரு துறைக் கோவை முதலிய நூற்கள் இவன் வரலாற்றைப் பறை சாற்றும்.
காந்தன், இன்ன பிற சோழ மன்னர்களின் சேதிகளோடு சீக்கிரம் சிந்திப்போம் அடுத்த பதிவில்….
நன்றி: “சோழர் வரலாறு” – நூலாசிரியர்: திரு. டாக்டர்.மா.இராசமாணிக்கனார்,
“இறை நிலை அறிதலும், போற்றலும் எம் இசைவில்லையெனினும், மாந்தர் தம் நிலை புரிதலில், அதுவே ஆழிப் பயணத்தின் சிறு துரும்பென்பது சிந்தையில் கொள்வாயோ தேவி!” என்று இறைவன் புதிர் விடுக்க, தேவி, புன்னகையால் மறுதலிக்க வையம் இன்புற்றிருந்தது.
- இன்னலறிவாய் மனமே!
இன்னதே, உலகென்று
அலறும் அறிவு,
வாய்மை மனமே!
நானென்ற பூதம்!
நீயல்லவென்று, நாளும்,
வானீன்ற நாதன்!
தாளென்றும் கோளில்,
அறிந்தருள் மூழ்கி,
அடைந்தருள் ஜோதி!
சோழர் வரலாறு – பழைய பதிவுகள்
இராஜராஜ சோழனின் வாரிசுகள், உண்மையில் யார் இராஜராஜ சோழனின் வாரிசுகள்?
சோழப்பேரரசு