Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

வனம்-கனவு-மழலை

வனம்-கனவு-மழலை

 

ரூ.175 பரிசு பெறும் குட்டிக்கதை! கதாசிரியர்: ஸ்ரீமன்

 

வாண்டு வெங்கிக்கு அன்று ஒரே கொண்டாட்டம் தான்! ஏனெனில், அலுவலகத்திலிருந்து திரும்பிய தந்தை, நாளை விடுமுறை தினத்தன்று, ‘இன்பச்சுற்றுலா செல்லப்போகிறோம்’, என்றிருந்தார்!  

 

வெங்கி தன் தாய் தந்தையுடன் விடுமுறையில், ஒரு அடர்ந்த வனத்திற்குச் சுற்றுலா சென்றான். அந்தக் காடு, புலிகள் வாழும் வனம் ஆகும். அங்கு, புலிகள் வராத இடங்களில், சென்று சுற்றிப் பார்த்தார்கள். அங்கு, குரங்கு, மான், காட்டெருமை, காண்டாமிருகம் முதலான பல விலங்குகளைக் கண்டனர். இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே மலை உச்சிக்கு சென்று, தாங்கள் கொண்டு சென்ற மதிய உணவை உண்டனர்.

 

வெயில் தாழும் நேரம் நெருங்கியதால், மலையுச்சியிலிருந்து இறங்க முற்பட்டனர். கீழே, இறங்கும் போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. கன மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மரங்களும் ஒடிந்து விழுந்து மகிழ்வுந்து செல்ல முடியாத நிலை உண்டாயிற்று. வந்த வழியே திரும்பிச் சென்ற போது, மலைக்காட்டின் மண் பாதையொன்றைக் கண்டனர். மாலை நெருங்கி வருவதாலும், சாலை சரி செய்ய நேரமாகும் என்பதாலும், அவர்கள் அக்காட்டு வழியில் செல்வதற்கு முடிவெடுத்தனர்.

 

அந்தப் பாதை, மிகவும் மோசமாகவும், கரடுமுரடானதாகவும் இருந்தது. பாதி வழியில், மகிழ்வுந்தின் சக்கரம், கூரான கற்கள் குத்தி, காற்று இறங்கியதுடன், மழையால் ஏற்பட்டிருந்த சகதியினால், புதைகுழியில் அறியாமல் சிக்கிக்கொண்டது. மூவரும் சமயோசிதமாக மகிழ்வுந்திலிருந்து குதித்துத் தப்பினர். நடந்தே கடப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, மழைக்கு ஒதுங்க வேண்டி இறங்கும் போது, ஒரு குகையைக் கண்டனர். விலங்குகள் ஏதும் இல்லை என்று தெரிந்த பிறகு, மழை நிற்கும் வரை, அக்குகையில் காத்திருந்தனர். 

 

மழை விட்டவுடன், காட்டு வழியாக நடக்கத் தொடங்கினர். ஆனால் அவர்கள் மலையை விட்டு இறங்கும் வழியைத் தவற விட்டனர். வழியில் ஒரு பெரிய அருவியை கண்டு வியந்தனர். அந்த அருவியிலிருந்து ஓடும் நதியைத் தாண்டி செல்ல முடிவெடுத்தனர். ஆனால், அந்த நதியில், முதலைகள் இருந்ததைக் கண்டனர். அதனால் அந்த நதியைக் கடக்க, ஒரு படகு ஒன்றைத் தயாரிக்க முடிவெடுத்தனர்.

 

படகு செய்வதற்க்குத் தேவையான பொருட்கள், மரக்கட்டைகள், சிறு குச்சிகள் மற்றும் மர விழுதுகள் ஆகியவற்றைச் சேகரித்து படகு செய்ய முற்பட்டனர். மகிழ்வுந்திலேயே அனைத்து பொருட்களும் புதைந்து விட்டதால், காட்டில் தேடி கனிகள் சிலவற்றைச் சேகரித்துப் புசித்தனர். அருகில் எங்கோ மிருகம் எதுவோ இறந்த வாடையும் வீசி அவர்களை இம்சித்தது. 

 

ஒரு வழியாக இருட்டுவதற்குள் படகைச் செய்து விட்டனர். வெங்கிக்கு ஒரே பெருமை. காகிதத்தில் செய்த படகை விட, மரப்படகு அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால்  முதலைகள் நிறைந்த நதியை எப்படிக் கடப்பது என்று எண்ணம் வந்தபோது, அவன் தந்தை, அந்த வாடை வந்த திசை நோக்கிச் சென்று, அங்கிருந்து இறந்து கிடந்த ஒரு மானின் உடலை இழுத்து வந்தார்.

 

அந்த மானை, நதியின் கரையில், இவர்கள் இருந்த பகுதியிலிருந்து சிறிது தள்ளிப் போட்டனர். முதலைகள் மானை நோக்கி சென்ற பிறகு, நதியின் அகலம் குறைவான இடத்தில் தங்கள் படகை வைத்து, தங்கள் கைகளாலேயே நீரை விலக்கி விலக்கிக் கடந்தனர்.

 

நதியைக் கடக்கும் போதே இருட்டி விட்டபடியால், காட்டில் அதற்கு மேல் செல்ல இயலவில்லை. வளைந்து நெளிந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தில் மூவரும் ஏறி அமர்ந்து கொண்டனர். ஏற்கனவே சேகரித்த பழங்கள் சில அவர்கள் பசியைப் போக்க உதவியது. மழை பெய்து நின்றிருந்தபடியால், காற்று சற்று ஜில்லென்றிருந்தது. தீ வளர்க்கலாமென்று பார்த்தால், மரம், செடி கொடிகள் யாவும் நனைந்திருந்தன. இரவு முழுவதும் குளிரிலேயே நடுங்கிக்கொண்டு காத்திருந்து விட்டு, காலையில் சூரிய ஒளி தெரிந்ததும், நடக்கத் தொடங்கினர்.

 

வனத்தில் கண்காணிப்பு கோபுரம் ஒன்று தெரிந்தது. மகிழ்வுடன் சென்று, மேலே ஏறிப் பார்க்கையில் யாரையும் காணவில்லை. அங்கிருந்து பார்க்கையில் சற்று தொலைவினில் மனிதர் நடமாட்டம் தெரிந்தது. உடனே இறங்கி அந்த திசை நோக்கி நடந்தனர். சிறிது தூரத்தில் ஒரு வழியாக, மலைக்கிராமம் ஒன்றினை வந்தடைந்தனர்.

 

அந்த ஊரின் பெரியவர், வெங்கிக்கும் அவன் பெற்றோருக்கும் உணவளித்து, ஒரு நபரை அவர்களுக்கு உதவிக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் பெயர் செங்கோடன். செங்கோடன் காட்டிலேயே பிறந்து வளர்ந்த படியால், அனைத்து பாதைகளும் தலைகீழ் மனப்பாடம் செய்தவர் போல், மிகவும் மிடுக்காக அவர்களை புலிகள் வனத்தின் நுழைவுப் பகுதியை நோக்கிக் கூட்டிச் சென்றார். 

 

வழியில், வெங்கிக்கு, ஒட்டகச் சிவிங்கிகள், வரிக்குதிரை முதலிய பல விலங்குகளைக் காட்டிக்கொண்டே சென்றார். அப்போது மிகப்பெரிய பள்ளத்தாக்கையும் காட்டினார். ஒடிந்து விழுந்திருந்த மரத்தைக் கொண்டு பள்ளத்தாக்கை லாவகமாகக் கடக்க வைத்தார். அவ்வளவு பெரிய மரம், கிட்டத்தட்ட ஒரு பாலம் போலே கிடக்கக் கண்டனர். ஏற்கனவே கடந்து வந்த நதி, வளைந்து நெளிந்து மீண்டும் வழியில் குறுக்கிடும் இடத்தில், முதலைகள், நீர் யானைகள் முதலியவற்றைக் காணும் யோகம் வெங்கிக்குக் கிடைத்தது. சிறிது வளைந்து நெளிந்து சென்ற போது, அந்த நதி, சிறு வாய்க்கால் போல் (நம்மூர் சாக்கடை அளவில்) செல்வதைக் கண்டனர்.

 

செங்கோடன் காட்டில் தானொரு அரசன் போலவே, அனைத்தும் அறிந்தவனாய் முன்னேறி அவர்களை அழைத்துச் சென்றான். வரும் வழியில், புலியொன்று பதுங்கி மானைப் பாய்ந்து கொன்று தின்றதையும் காட்டினான். வெங்கியும் அவன் பெற்றோரும் சில மணித் துளிகளில் வனத்தின் எல்லையை அடைந்தனர். செங்கோடனுக்கு நன்றி தெரிவித்து, ஒரு நாள் கண்டிப்பாக தங்கள் வீட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்தனர்.  “கண்ணு! எந்திரி! கிளம்பத் தயாராகலாம்” என்று வெங்கியின் தந்தை அழைக்க, வெங்கி திடுக்கிட்டு எழுந்து, இன்பச் சுற்றுலா செல்ல சந்தோசமாக அதே சமயம் ஒரு வித திகிலோடு தயாராகினான். 

 

பின்குறிப்பு: வெங்கி, அனகோண்டா, அனகோண்டா 2, வனமகன், தும்பா, கும்கி, காட்டுப்புலி, ஈவில் டெட் முதலான படங்களை விரும்பிப் பார்ப்பான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை! இந்தக் கதை, அந்தச் சாயல்களில் இருந்தால் அதற்கு நாம் பொறுப்பில்லை 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *