Story Highlights
- கருத்தோவியம்
அவளுக்குள் நான்
இது கதையா? கட்டுரையா? இச்சொற்குவியல்களில், எதையும் எதிர்பாராமல் பயணிக்க, எண்ணங்கள் ஓடும் திசை காட்டும் மனம் காண்பதே இப்பதிவின் நோக்கம்
பெண் எப்படி முழுமையாகிறாள்?
அப்படி என்றால் என்னவென்று தெரியுமா?
வானத்தில் இருந்து மழை பெய்து, அந்த மழைத்தண்ணிர் போகுமிடம் பொறுத்து அமைகிறது; அதன் சிறப்பு மற்றும் பயன்பாடு. அது போல், பெண் என்பவள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்து, குழந்தையாக வளர்ந்து, 18 வயது வந்தபின், பருவப் பெண்ணாக மலர்கிறாள். அடுத்ததாக, அவளுக்கு திருமணம் செய்து விடுகிறார்கள். அந்தப் பெண், தாயின் வீட்டில் இருக்கும் போது இருந்த சுதந்திரம், புகுந்த வீட்டில் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆணுக்கு இருக்கும் சுதந்திரம், பெண்ணுக்கு கிடைக்காது; கிடைக்கவும் விட மாட்டாங்க!
ஏதோ ஒரு சில அதிர்ஷ்டமான பெண் குழந்தைகள் மட்டுமே, நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து, அவர்கள் செல்லமாக வளர்க்கப்படுகிறார்கள். அவளுக்கு பிடித்தமான படிப்பை படிக்கிறாள். ஆனால், வசதி குறைவான குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள், ஏதோ ‘+2’ அல்லது பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துவிட்டு, படிப்பு போதும் என்று அவளுக்கு திருமணம் செய்து விடுகிறார்கள். அந்த பெண், கல்யாணம் செய்தவுடன், தன் அம்மா, அப்பா மற்றும் கூட பிறந்தவர்களை மறந்து இருக்கனுமாம். அவங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால், இந்தப் பெண்ணால், அவங்களுக்கு, ஒரு உதவி கூட செய்ய முடியாமல் தவிப்பாள். ஒரு சில கணவர்கள் அப்படி இருப்பதில்லை. ஒரு சிலர் மனைவியை புரிந்துகொள்வார்கள். (அதில் என் கணவர் அவ்வாறு இல்லை)
சரி கதைக்கு வருவோம். அந்தப் பெண் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவளுக்கு குழந்தை பிறந்ததும், அவள் பாசத்தை அதற்கு பங்கு போடுகிறாள்; கணவரிடமும் பாசமாக இருப்பாள்.
திருமணத்திற்கு முன், ஒரு பெண், அழகு தேவதையாக, அவளின் தாய், தந்தைக்கு வலம் வருகிறாள். ஒரு பெண் குழந்தை, எந்த நிறத்தில் இருந்தாலும், அவள் பெற்றோர்களால் தெய்வமாகவும், தேவதையாகவும் பார்க்கப்படுகிறாள்.
ஏன்? ஒரு சில தந்தைக்கோ தன் தாயே மகளாக பிறந்திருக்கிறாள் என்று நினைப்பார்கள் (என் வீட்டில், அவர் தங்கை பிறந்திருக்கிறாள்!, என்று நினைக்கிறோம்)
அந்த குழந்தை பிறந்த பின், அவளுக்கு அழகான பெயர் சூட்டப்படுகிறது. அந்த பெண் குழந்தை, தன் தந்தை, தாயிடம் பாசத்தை நன்றாக காட்டும். எப்பொழுதும், ஒரு ஆண் குழந்தையைக் காட்டிலும், பாசத்தை ஒரு பங்கு அதிகமாக காட்டும். அதற்காக, ஆண் குழந்தை பாசமில்லை என்று அர்த்தமில்லை. அவன், பாசத்தை வெளியே காட்ட மாட்டான். பெண், பாசத்தை வெளியே காட்டுவாள்.
அந்த தாய், தந்தை, அந்த பெண்ணிற்கு தலைவாரி, பூ வைத்து, பொட்டு வைத்து, பட்டுப்பாவாடை அணிய வைத்து மற்றும் கையில் வளையல், கம்மல் மற்றும் அனைத்து விதமான, அணிகலன்களை அணிவித்து, அழகு பார்ப்பார்கள். அவளும், தன் அப்பா, அம்மாவிடம், அதைப் போட்டுக் கொண்டு நடனமாடுவாள், வெட்கப்படுவாள், மனதளவில் சந்தோசப்படுவாள். அவள் அப்பா, ‘என் செல்லக்குட்டி, என் தங்கக்குட்டி, எவ்வளவு அழகாகயிருக்கிறாள் பார்!’, என்று அவர் மனைவியிடம் கூறுவதோடு, ‘என் மகளுக்கு சுற்றி போடு!, என் கண்னே பட்டுவிடும்’ என்றும் கூறுவார். அவளின் தாய், ‘என் மகள், என்னை மாதிரி!, அதான் அழகாகயிருக்கிறாள்!’, என்று கூறுவாள். ஆனால் அவள் தந்தையோ, ‘என் மகள் என்னை மாதிரி இருக்கிறாள்!’, என்று சொல்லிக்கொள்வார்.(என் வீட்டில் கூட இப்படி தான்!, அவர், என் செல்ல மகளை “A1 Positive தங்கம்” என்று கூறுவார்)
முதன்முதலில், பள்ளிக்கு அனுப்பும் போது, அந்தக் குழந்தை அடம் பிடித்துக் கொன்டே செல்லும்! ஏனென்றால், ஐந்து வயது முடிந்து, தன் அப்பா, அம்மாவை பிரிந்து, ஏழு மணிநேரம் பிரிந்து இருக்க வேண்டும் அல்லவா!. அவர்களும், ஏதோ தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால் எப்படி இருக்குமோ, அது போல் வேதனைப்படுவார்கள்.
அவ்வளவு பாசம், அவர்கள் குழந்தைகள் மீது. பள்ளிக்குச் சென்று, மாலை திரும்புவாள். வந்ததும் பள்ளிக்கூடத்தில், ஆசிரியை சொல்லி கொடுத்த பாடத்தை அல்லது பாட்டுக்களைப் பாடிக்காட்டுவாள். அதை கேட்டதும், அவளின் தாய், தந்தைக்கு வரும் சந்தோசம், அப்பப்பா! அதைச் சொல்ல, வார்த்தையே இருக்காது. என் பிள்ளை, எவ்வளவு அழகாய்ப் படிக்கிறாள்? என்று மனம் பூரித்து போகும். அது தவறாக இருந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டார்கள்.
ஏனென்றால், அவள், தன் செல்ல மகளாச்சே!. அவள் பள்ளிப்படிப்பை முடித்து, பருவம் அடைந்து, திருமண வயதிற்கு வந்துவிடும் போது, அவள் தந்தை, வளர்ந்து நிற்கும் அந்த குழந்தைக்கு, முத்தம் கொடுக்கும் ஆசை இருந்தாலும், அவ்வாசையை மனதிலேயே மறைத்துக் கொண்டு, மகிழ்வார். ஏனென்றால், ஒரு தந்தை, தன் மகளுக்கு, குறைந்தபட்சம் 12 அல்லது 15 வயது வரை தான், அவளைத் தொட்டுக் கொஞ்சுவார்கள். மகள் பெரிதாகிவிட்டாள் என்று, அவர்களாகவே விலகிக் கொள்வார்கள்.
இருந்தாலும், மனதளவில் அவளை ரசித்துக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும், முத்தம் கொடுத்துக் கொண்டும் தான் இருப்பார்கள். (இதை எழுதும் போது, என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது! கண்ணில் தண்ணீரும் வந்துவிட்டது. நானுங்கூட, திருமணம் ஆகும் வரை என் அப்பாவிடம் தான், அதுவும் காலைத் தூக்கி, மேலே போட்டுக் கொண்டு தான் தூங்குவேன்)
நடுத்தரக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, வசதி குறைவாக இருந்தாலும், பெற்றோர் தம் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு, எவ்வளவு கோடி ருபாய் கொடுத்தாலும், அதற்கு ஈடாகாது. அந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகிவிடுகிறாள். அந்தப் பெண்ணும், அவள் தந்தை, பாசத்தோடு பழைய சாப்பாட்டைப் போட்டால் கூட, அது அவளுக்கு பசியை ஆற்றும் விருந்தாகத்தான் எண்ணி வாழ்கிறாள். திருமண வயது வந்தவுடன், அவளுக்கு நல்ல மாப்பிள்ளை தேடுவார்கள். ஏனென்றால், அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக, ஒரு பெண்ணுக்கு, ஆண் துணை வேண்டும் என்று நினைப்பார்கள்.
திருமணம் நடந்து முடிந்த பிறகு, தன் அம்மா, அப்பாவைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. எப்படி, அவள், ஆறு வயதில் பள்ளிக்கூடத்திற்கு சென்றாலோ, அது போல், அவர்கள் வேதனைப்படுவார்கள். பள்ளிக்குச் சென்றாலாவது, மாலையில் திரும்பி விடுவாள். ஆனால், இங்கோ எப்பொழுதுமே திரும்பி வர முடியாது. அப்படி வந்தால், தன் கணவரின் அனுமதி பெற்றுத்தான் வரவேண்டும்.
20 வயது வரை, கூடவே இருந்து, விளையாடி மகிழ்ந்து, பல சந்தோசங்களை அனுபவித்த அந்தப் பெண், இப்பொழுது, ஒரு ஆணுக்குத் துணையாக வருகிறாள். தன் அப்பா, அம்மா மற்றும் கூட பிறந்தோர்களை விட்டு விட்டு வரும் போது, அவள் மனம் வேதனை அடையும். கணவர்கள் மட்டும், அவர்கள் பிறந்த வீட்டில், அவர்கள் சாகும் வரை, அவர்கள் அப்பா, அம்மாவுடன் இருக்கலாம். ஆனால், பெண்கள் மட்டும் தன் 22 வயதில், அனைத்தையும் மறந்துவிட்டு இங்கு வரவேண்டும்?
ஏனென்றால், ஆண்களைப் பெற்றெடுத்த தாய், தந்தைக்கு, இவர்கள் தானே ஆதரவு?. எனவே, இது தவறில்லை! இந்த ஆண்கள், கல்யாணம் ஆன முதல் மாதம் வரை சரியாகத்தானிருப்பார்கள். வாராவாரம், அந்தப் பெண்ணை, அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். பின், அவ்வளவு தான்! ‘இனி, மாதம் ஒரு முறை சென்று அவர்களை பார்த்தால் போதும்’, என்று சொல்வார்கள். இந்தப் பெண்ணும், சரியென்று தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பாள்.
காலங்கள் சென்று, சில மாதங்கள் கழித்து, இந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிக்கிறாள். இதைக் கேள்விப்பட்டு, பெண்ணின் அம்மாவும், அப்பாவும், தன் ஊரிலுள்ள வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, உடனே பெண்ணைப் பார்க்க வருவார்கள். அந்தப் பெண்ணுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பார்கள். குழந்தை பிறக்கும் வரை, அந்தப் பெண்ணைக் கவனமாக பார்த்துக் கொள்வார்கள். ஆணின் வீட்டிலிருக்கும் தாய், தந்தையும் பார்த்துக்கொள்வார்கள். 9 மாதம் கழித்து, பிரசவத்திற்காகத் தன் அம்மா வீட்டிற்குச் செல்கிறாள்.
அந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்த பிறகு, அந்தக் குழந்தையையும், கண்ணுக்கு கண்ணாக, பார்த்துக் கொள்வார்கள். இதே நிலை தான், பெண்ணின், மாமனார், மாமியாரிடமும். 3 மாதங்கள் ஆகும் வரை இல்லாத பிரச்சினை, 3 மாதம் ஆனவுடன் குழந்தையை, தன் ஊருக்கு, அழைத்துச் செல்ல விரும்பும் போது வரும்.
அப்படியும், இப்படியும் சமாளித்து, ஒரு 6, 7 மாதங்கள் கடத்திவிட்டாலும், ஒரு நாள், புகுந்த வீட்டிற்கு சென்றுதானே தீர வேண்டும். இங்கு அவள் பெற்றோர்கள் மறுபடியும், பிரிவு ஏக்கத்தில் வாடுவர். இது தொடர் கதையாகவும், இப்படியே பல வருடங்கள் போய்விடுகின்றது. ஏதேனும் ஒரு நாள், அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போய்விடுகிறதென்றால், தன் கணவரிடம் தன் அம்மாவை பார்த்து விட்டு வரக் கேட்டால், உடனே விட மாட்டார்கள். இவ்வாறு தான் வாழ்க்கை என்பது நரகம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது பல பெண்களுக்கு! (எல்லா ஆண்களும் கல் நெஞ்சக்காரர்கள் அல்ல)
உங்கள் வீட்டுப்பெண்களையும், உங்கள் வீட்டிற்கு வந்த பெண்களையும் சற்று நேரம், இக்கதையில் பொருத்திப் பாருங்கள், இக்கதையில், கருத்தில் ஒன்றும் அனைவருக்குள்ளும் (அவளுக்குள் நான்) நான்