Story Highlights
- துரோகத்தின் வலி
இது ஒரு வேதனைப் பதிவு!
நம்பிக்கைத் துரோகத்தை, துரோகத்தின் முகத்திரை கிழிந்து நம் மனதை வருத்தப்பட வைக்கும் தருணத்தின் பதிவு இது!
I Love you Sun TV!
Once upon a Time! Not Now!
அப்போது எனக்கு 10 அல்லது 11 வயதிருக்குமென்று நினைக்கின்றேன்! அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை! நான் எனது ஆத்தாவுடன் (தந்தையின் தாய்) வசித்து / வளர்ந்து வந்தேன்! அக்காலங்களில் எல்லாம் எனது பக்கத்து வீட்டில் லோக் சுந்தர் – லோக் பிரதாப் வீட்டினர் வரும் முன்னர் வரை, டிவி உள்ள 2 வீடுகள்: வடிவேல் அண்ணன் வீடு மற்றும் விஜயக்குமார் வீடு. இதில் வடிவேல் அண்ணன் வீட்டில் ஞாயிறன்று காலை மட்டும் இராமாயணம் பார்ப்பேன். (பல ஞாயிறுக்கள் காத்திருந்து கதவு திறக்கப்படாமல் திரும்பிய நாட்களும் உண்டு. அவர்களே கதவு திறந்து, வந்து அமர்ந்து பார் என்றால் மட்டுமே பார்ப்பேன்) விஜயக்குமார் வீட்டில் வெள்ளியன்று இரவு ஒளியும் ஒலியும் பார்ப்பேன் (அவர்கள் வீட்டில் இருந்த வெள்ளை போர்டபிள் டிவி, சினிமா திரைபோல் பாக்ஸ் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் அக்கதவை மூடி, பூட்டி வைத்திருப்பார்கள்.) ஞாயிறன்று மாலை திரைப்படம் போடுவார்கள். ஏண்டனா வைத்து பார்த்த காலம் அது. ஒருமுறை பாசமலர் படம் திரையிடப்பட்டு இரவு 10 மணி வரை படம் ஓடியது இன்றும் நினைவில் உள்ளது!
இப்படி கழிந்து கொண்டிருந்த எனது விடுமுறைப் பொழுதுகளினிடையே எனக்கு கிடைத்திருந்த ஒரே நண்பன் மற்றும் ஆறுதல் Philips Radio. எனக்கு அப்போதெல்லாம் ஒரு பெருமை! நான் என்ன செய்தாலும் கேட்கும் இந்த வானொலி என்றொரு கர்வம்! புத்தகம் தவிர்த்த நேரங்களில் எனது பெரும்பான்மையான நேரங்கள் அவ்வானொலியோடே கழிந்தது! எந்த நேரத்தில் எந்த எண்ணில் தமிழ் ஒலிக்கும் என்பது அன்று எனக்கு அத்துப்படி! அப்போதெல்லாம் ஒளியும் ஒலியுமில் கூட புதுப்பாடல் கிடையாது. ஆனால் சிங்கப்பூர் வானொலியில் புதுப்பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அந்த கால கட்டங்களில் கேபிள் டிவி கூட வந்திருக்கவில்லை.
அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் எனக்கு கனவுகளில் நாங்கள் டிவி வாங்கி விட்டதாயும் அந்த டிவியில் நான் ஏதோ பொத்தானைச் சுத்தி சுத்தி பார்க்கும் போது அதிலும் நிறைய DD(தூர்தர்சன்) போல் வேறு நிறைய டிவிக்கள் வருவது போலவும் அதையும் நான் தான் கண்டுபிடித்தது போலவும் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நிஜத்தில் நான் படித்து முடித்து வேலைக்கு சென்றுதான் டிவி வாங்கினேன் என்பது வேறு கதை!
அதற்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து முதலில் கேபிள் டிவி வந்தது. அதில் மதிய நேரங்களில் திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தனர். பிறகு சன் டிவி வந்தது. சன் டிவி வந்த பிறகு எங்களின் மன நிலைகளில், வாழ்க்கை முறைகளில் எல்லாமே மாறின. அதன் நிகழ்ச்சி ஒளிபரப்பே எங்களது பல அன்றாட வேலைகளை மாற்றி அமைத்தன. ஆண்டுக்கொருமுறை சன் டிவி ஒளி பரப்பிய நேரடி பரிசு நிகழ்ச்சிகள் அக்காலத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய பிரம்மாண்டம் என்றால் அது மிகையன்று!
அப்படி என்னோடு வளர்ந்த ஒரு டிவி, தனது வியாபாரமே அதன் குறிக்கோள், அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டோம் என்று நாம் புரிந்து கொண்டபோது (அதுவும் கடந்த சில 6, 7 ஆண்டுகளில்தான்) உறவென்று வளர்த்தோம் அது உயிர்க்கொல்லி நோய் என்றே வலிக்கிறது.
இந்தியில் பிறந்த ஒரு டிவி (ZEE தமிழ்) கூட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தங்கள் டிவி லோகோவுக்கு கீழ் போட்டிருக்கும் போது எங்கள் தமிழ் கொண்டு வளர்ந்து, தமிழ் கொன்று வாழும் விஷமாகி விட்ட சன் டிவி 23ம் ஆண்டு தினத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் எனும்போது
I love you SUN TV! Once upon a time! but not now!
என்று கத்திச்சொல்லத் தோன்றுகிறது.
ஆனால், உணர்வில்லா துரோகிக்கு, செவியும், மனமும் ஊனமென்று புரிந்ததால் உன்னைப் புறக்கணிக்கிறேன்! இந்த வகையில் புறக்கணிக்கும் முதல்வன் நான் என்றே நம்புகிறேன். ஆனால் கடைசியும் நானாகவே இருப்பேனென்று நம்பாதே துரோகியே!
உண்மையை மக்கள் உணரும்போது, உலகமே உன்னைப் புறக்கணிக்கும்!